உலகம்
ஓட்டலில் மெதுவாக சாப்பிட்ட நபருக்கு ரூ.10,000 அபராதம்.. அதிர்ச்சி சம்பவம்!

பொதுவாக உணவு சாப்பிடும் போது அவசரம் இன்றி மெதுவாக கடித்து சாப்பிட வேண்டும் என்றும் அப்பொழுதுதான் உணவு எளிதாக ஜீரணம் அடையும் என்றும் மருத்துவ வல்லுநர்கள் அறிவுறுத்து உள்ளனர். ஆனால் ஹோட்டலில் மெதுவாக சாப்பிட்ட ஒரு நபருக்கு பத்தாயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அமெரிக்காவில் உள்ள கேம்பிரிட் என்ற பகுதியில் மெக்டொனால்டு உணவகத்தில் ஒரு நபர் தனது காரில் தனது சகோதரருடன் சாப்பிட வந்தார். அவர் காரை தனியார் பார்க்கிங் சென்டரில் நிறுத்திவிட்டு மெக்டொனால்ட் உணவகம் சென்று சாப்பிட்டார். இருவரும் நீண்ட நேரம் பேசிக்கொண்டே சாப்பிட்டுக் கொண்டிருந்த நிலையில் சாப்பிட்டு முடித்துவிட்டு காரை எடுக்க வந்தபோது அவர் 100 யூரோ அபராதம் செலுத்த வேண்டும் என கூறப்பட்டதால் அவர் அதிர்ச்சி அடைந்தார். 100 யூரோ என்பது இந்திய மதிப்பில் சுமார் 10,000 ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது.
மெக்டொனால்ட் வாடிக்கையாளர்களுக்காக தனியார் பார்க்கிங் நிறுவனம் ஏற்பாடு செய்திருந்த பார்க்கிங்கில் அதிகபட்சமாக 90 நிமிடம் மட்டுமே பார்க்கிங் செய்ய முடியும் என்றும் 90 நிமிடத்தை தாண்டினால் 100 யூரோ அபராதமாக செலுத்த வேண்டும் என்றும் கூறப்பட்டதை கேட்டு அவர் ஆத்திரம் அடைந்தார்.
மெக்டொனால்டு உணவகத்தில் 90 நிமிடத்திற்குள் சாப்பிட வேண்டும் என்று எந்த வரையரையும் கூறவில்லை என்றும் இது மிகவும் அநியாயம் என்றும் அவர் ஆத்திரத்துடன் கூறினார். ஆனாலும் அவர் வேறு வழி இன்றி அந்த அபராத சீட்டை பெற்றுக்கொண்டு அபராதம் செலுத்தியதாக தனது சமூக வலைதளத்தில் கூறியுள்ளார்.
மெக்டொனால்டு உணவகத்திற்கு காரில் செல்பவர்கள் இனிமேல் 90 நிமிடத்திற்குள் சாப்பிட்டு விட்டு சென்று விடுங்கள் என்று அவர் ஆத்திரத்துடன் சமூகவலைதளத்தில் பதிவு செய்துள்ளார். இந்த பதிவுக்கு ஏராளமான கண்டனங்கள் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
ஒரு உணவகத்தில் குடும்பத்துடன் செல்பவர்கள் எப்படி 90 நிமிடத்திற்கு சாப்பிட்டு வெளியே வர முடியும் என்றும் இவ்வளவு நிமிடத்திற்குள் தான் சாப்பிட வேண்டும் என்ற வரையரையும் வாடிக்கையாளர்களுக்கு விதிப்பது சரியானது அல்ல என்றும் பலர் கருத்து கூறி வருகின்றனர். ஆனால் அதே நேரத்தில் மெக்டொனால்டு உணவகத்திற்கு ஏராளமான கார்கள் பார்க்கிங்கிற்கு வருவதால் அதிக நேரம் கார்கள் நிறுத்துவதை அனுமதிக்க முடியாது என கார் பார்க்கிங் எடுத்த தனியார் நிறுவனம் தெரிவித்துள்ளது.