செய்திகள்
மகளிர் உரிமைத் தொகை விண்ணப்ப நிலையை ஆன்லைனில் தெரிந்துகொள்ளலாம் – தமிழக அரசு புதிய வசதி!

மகளிர் உரிமைத் தொகை விண்ணப்ப நிலையை ஆன்லைனில் தெரிந்துகொள்ள புதிய வசதி
தமிழக அரசு, “உங்களுடன் ஸ்டாலின்” (https://ungaludanstalin.tn.gov.in) என்ற சிறப்பு இணையதளத்தை அறிமுகப்படுத்தி, மகளிர் உரிமைத் தொகை உள்ளிட்ட பல்வேறு சேவைகளை மக்களுக்கு எளிமையாக வழங்கி வருகிறது.
இந்த இணையதளத்தின் மூலம், கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கு விண்ணப்பித்தவர்கள் தங்களின் கோரிக்கை மனு ஏற்றுக்கொள்ளப்பட்டதா, நிராகரிக்கப்பட்டதா அல்லது பரிசீலனையில் உள்ளதா என்பதை ஆன்லைனில் தெரிந்துகொள்ளும் வசதி தற்போது ஏற்படுத்தப்பட்டுள்ளது.
ஜூலை 15, 2025 அன்று தொடங்கப்பட்ட இந்த திட்டத்தின் கீழ், தமிழக முழுவதும் 10,000-க்கும் மேற்பட்ட சிறப்பு முகாம்கள் நடைபெற்று வருகின்றன. இதில் சாதிச் சான்றிதழ், பட்டா மாற்றம், ஓய்வூதியம், முதியோர் உதவித்தொகை, திருமண உதவித்தொகை, ஆதார் திருத்தம் உள்ளிட்ட பல்வேறு சேவைகள் வழங்கப்படுகின்றன. குறிப்பாக, மகளிர் உரிமைத் தொகைக்கு விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
அண்மையில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், “உங்களுடன் ஸ்டாலின்” முகாம்களில் பெறப்பட்ட மனுக்களில் 40% மகளிர் உரிமைத் தொகை தொடர்பானவை என தெரிவித்தார். மேலும் தகுதிவாய்ந்த பெண்களுக்கு விரைவில் மாதம் ரூ.1000 வழங்கப்படும் என்றும் உறுதியளித்தார்.
ஆன்லைனில் விண்ணப்ப நிலையை அறிய எப்படி?
முதலில் https://ungaludanstalin.tn.gov.in என்ற இணையதளத்திற்கு செல்லவும்.
“Track Your Application Status” என்ற பகுதியைத் தேர்ந்தெடுக்கவும்.
புதிய பயனர் என்றால் New User? Signup என்பதை கிளிக் செய்து பெயர், மொபைல் எண் உள்ளிட்ட விவரங்களை பதிவு செய்யவும்.
OTP மூலம் சரிபார்த்த பின் பயனர் கணக்கு உருவாகும்.
அதன்பிறகு மொபைல் எண் மூலம் லாகின் செய்து, உங்கள் கோரிக்கை நிலையை எளிதாக பார்வையிடலாம்.
இதன் மூலம் நிலுவையில் உள்ள கோரிக்கை, முடிவுற்ற கோரிக்கை, பரிசீலனையில் உள்ள கோரிக்கை உள்ளிட்ட அனைத்து தகவல்களையும் ஆன்லைனில் தெரிந்து கொள்ளலாம்.