இந்தியா
ஜி.எஸ்.டி. வரி விதிப்பால் யாருக்கு லாபம்? யாருக்கு நஷ்டம்? – ஒரு அலசல் பார்வை

நேற்று ஒன்றிய அரசு அறிவித்து அமலுக்கு வந்த ஜி.எஸ்.டி. வரி சீர்திருத்த நடவடிக்கைகளின் பயன்கள் எந்த அளவுக்கு சாதாரண பொதுமக்களை, ஏழை, எளியவர்களை சென்று சேரப் போகிறது என்று விரிவாக பார்ப்போமா?
2017 ம் ஆண்டு முதல் இருந்த 5% 12%, 18% மற்றும் 28% என்ற நான்கு அடுக்கு வரிவிதிப்பு முறை நேற்று முதல் 5% மற்றும் 18% என இரண்டு அடுக்கு முறையாக மாற்றப்பட்டு அடுத்து வரும் பண்டிகை காலத்தை சேமிப்பு திருவிழாவாக மாற உள்ளதாக இந்திய பிரதமர் அறிவித்துள்ளார். ஆனால், இந்த வரிவிலக்கு மற்றும் வரிகுறைப்பு அணைத்து பொருட்களுக்கும் இருக்குமா என்ற எதிர்பார்ப்பும், இதன் பலன்கள் வாடிக்கையாளர்களை சென்று சேர்வதை கண்காணிக்க ஒன்றிய அரசிடம் உரிய திட்டம் இல்லாததும் மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது.
எந்த விலைகள் குறையும்?
குறிப்பாக பொட்டலங்களில் அடைக்கப்பட்ட நொறுக்குத் தீனிகள், காபி, நெய், வெண்ணெய், பனீர், ஐஸ்கிரீம் போன்ற உணவுப் பொருட்களும், சோப்பு, ஷாம்பு, பற்பசை, மிதிவண்டிகள், ஜவுளி போன்ற வீட்டு உபயோகப் பொருட்களின் விலைகள் குறையும்.
97 விழுக்காடு மருந்துப் பொருட்களின் விலைகள் குறையும்.
ரூ.7500 வரை கட்டணமுள்ள தங்கும் விடுதி அறைகளுக்கும் 5% வரி மட்டுமே விதிக்கப்படும்.
32 அங்குலத்திற்கு மேற்பட்ட தொலைக்காட்சிப் பெட்டிகள், ஏசி, பாத்திரம் கழுவும் இயந்திரங்கள், சிறிய ரக கார்கள், 350 சிசிக்கு குறைவான மோட்டார் சைக்கிள்கள், சிமெண்ட் மற்றும் பிற கட்டுமான பொருட்களின் விலை குறையும்.
டிராக்டர் உள்ளிட்ட விவசாய இயந்திரங்கள் உபகரணங்கள் ஆகியவற்றின் விலை குறையும்.
இவ்வாறு பொருட்களின் விலை குறைவதால் நுகர்வோரின் வாங்கும் திறன் அதிகரித்து சில்லறை வர்த்தகம், இணையவழி வர்த்தகம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
குறிப்பாக பண்டிகை சீசனில் விற்பனை அதிகரிப்பு மற்றும் செயல்திறன் அதிகரிப்பதோடு மக்களிடம் பணப்புழக்கம் கூடுதலாக இருக்கும் எனக் கருதப்படுகிறது.
என்னென்ன பாதகங்கள் ஏற்படும்?
பிஸ்கட் தயாரிப்பு உள்பட சில நிறுவனங்கள் ஜிஎஸ்டிக்கு ஏற்ப வரி குறைத்தால் சில்லறை பிரச்னை ஏற்படும் என்பதால் அதே விலைக்கு சற்று கூடுதலாக வழங்கலாம் என முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும் சில நிறுவனங்கள் இந்த வரி விதிப்புக்கு ஏற்ப தங்கள் பொருள்களின் எடை மற்றும் தரங்களில் மாற்றத்தை ஏற்படுத்த உத்தேசித்திருப்பதால் இதனால் மக்கள் பாதிபடையாமல் அரசு கண்காணிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.
ஏற்கனவே கடும் நெருக்கடியை சந்தித்து வரும் தொழில்துறையினர் விலை குறைப்பால், மூலதனப்பொருட்களின் கொள்முதல் விஷயத்தில் ஏற்படும் இன்னல்களுக்கு தீர்வு என்ன என்ற கேள்வி எழுந்துள்ளது.
நோட்டு புத்தக உற்பத்தியாளர்கள், பயிற்சி புத்தகங்கள், கிராப் புத்தகங்கள், நோட்டுப்புத்தகம் ஆகியவற்றிற்கு விலக்கு அளிக்கப்பட்டிருப்பதால் இவை மலிவு விலையில் மாணவர்களுக்கு கிடைக்க வேண்டும் என்று அரசு கருதினாலும் நடைமுறையில் இது சாத்தியமில்லை என தெரிவிக்கின்றனர். நோட்டு புத்தகம் தயாரிக்க பயன்படும் காகிதங்களுக்கு ஜிஎஸ்டி உள்ளது. ஆனால், மூலப்பொருட்களுக்கு வரிவிலக்கு அறிவிக்கப்பட்டதால் இன்புட் வரி கோர முடியாது என்பதாலும், உற்பத்தி செலவு அதிகரித்திருப்பதாலும் விலை குறைய வாய்ப்பில்லை என்கின்றனர்.
இந்த ஜிஎஸ்டி வரி குறைப்பு மற்றும் விலக்கு தொடர்பான மாற்றங்களை அஞ்சல் துறை மற்றும் காப்பீட்டுத் துறைக்கான சாஃப்ட்வேர்களில் மாற்றம் செய்ய கால அவகாசம் ஆகும் என்பதால் இத்துறைகளில் செப்டம்பர் இறுதி வரை ஜிஎஸ்டி வரிவிதிப்பு தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் செப்டம்பர் 22க்கு பின்னர் காபபீடு பிரிமியம் தொகை செலுத்தினால் ஜிஎஸ்டி வராது என்று எண்ணி காப்பீடு பிரிமியம் செலுத்தாமல் இருந்த காப்பீடுதாரர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
ஜிஎஸ்டியால் கார்கள் விலை குறைக்கப்பட்டதால் பண்டிகை சீசன் விற்பனைக்காக ஏராளமான கார்களை செஸ்வரி செலுத்தி வாங்கி வைத்துள்ள டீலர்கள் அவற்றை நுகர்வோர் தலையில் சுமத்த முடியாது என்பதால் மாற்று வழி கோரி கையைப் பிசைந்த வண்ணம் உள்ளனர்.
சேவைப்பணிகள், தேர்வுக் கட்டணங்கள் ஆகியவற்றிற்கான வரிவிலக்கு மற்றும் குறைப்பு குறித்த தெளிவாள அறிவிப்புகள் இல்லாததால் குழப்பம் நிலவுகிறது.
பெட்ரோலிய பொருள்கள், தங்கம், வெள்ளி உள்ளிட்ட பொருட்கள் மீதான வரிவிலக்கு மற்றம் குறைப்பு குறித்தும் தெளிவான அறிவிப்புகள் இல்லை.
கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக தங்ஙம் விலை தொடர்ந்து உயர்ந்து வருவது நடுத்தரக் குடும்பங்களின் திருமணங்களில் பல்வேறு சிக்கல்களை எற்படுத்தி வருகின்றன.
தீபாவளி பட்டாசுகள் மீதான வரிவிலக்கு மற்றும் குறைப்பு குறித்தும் தெளிவான அறிவிப்புகள் இல்லை.
இரயில், பேருந்து, விமானம் மற்றும் கப்பல் பயணக் கட்டணங்களில் வரிவிலக்கு மற்றும் குறைப்பு குறித்தும் தெளிவான அறிவிப்புகள் இல்லை.
கடந்த எட்டு ஆண்டுகளாக கூடுதலாக வசூலிக்கப்பட்ட ஜிஎஸ்டி தொகை மக்களுக்கு திருப்பி வழங்ஙகப்படுமா என்ற மில்லியன் டாலர் கேள்வியும் எழுந்துள்ளது.

இந்த வரி சீர்திருத்தத்தால் இரண்டரை இலட்சம் கோடி மக்களுக்கு சேமிப்பு என்று பிரதமர் கூறியுள்ள போதிலும் 160 கோடி மக்கள் தொகை கொண்ட இந்த நாட்டில் கூட்டிக் கழித்துப் பார்த்தால் ஒவ்வொரு குடிமகனுக்“கும் ரூ.119 மட்டுமே மிச்சம் ஆகப் போகிறது என்பது யானைப் பசிக்கு சோளப்பொரி போட்ட கதையாகத்தான் போகிறது.
ஆக மொத்தத்தில் இந்த வரிவிலக்கு மற்றும் குறைப்பால் சாமானிய ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கு சொல்லிக் கொள்ளும் அளவுக்கு பலன்கள் கிடைக்கப்போவதாக தெரியவில்லை.













