வணிகம்
தேசிய ஓய்வூதியத் திட்டம் 2025: அக்டோபர் 1 முதல் அமலுக்கு வரும் முக்கிய மாற்றங்கள்!

தேசிய ஓய்வூதியத் திட்டத்தில் (NPS) ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (PFRDA) பல புதிய மாற்றங்களை அறிவித்துள்ளது. இவை அக்டோபர் 1, 2025 முதல் நடைமுறைக்கு வரும். அரசு சாராத துறை சந்தாதாரர்களுக்கான இந்த புதிய விதிமுறைகள் முதலீட்டில் அதிக வாய்ப்புகளையும், நெகிழ்வுத்தன்மையையும் (Flexibility) வழங்கும்.
🔹 பல திட்டங்களை நிர்வகிக்கும் வசதி
இனி அரசு ஊழியர்கள் அல்லாத NPS சந்தாதாரர்கள் ஒரே PRAN எண்ணைப் பயன்படுத்தி பல்வேறு மத்திய பதிவேடுகள் (CRAs) வழியாக பல திட்டங்களை நிர்வகிக்க முடியும். இதற்கு முன்பு, ஒரே CRA-வில் ஒரு திட்டம் மட்டுமே அனுமதிக்கப்பட்டது. இப்புதிய நடைமுறை முதலீட்டாளர்களுக்கு தங்கள் போர்ட்ஃபோலியோவை விரிவுபடுத்தவும், நிதி இலக்குகளுக்கு ஏற்ப தனிப்பயனாக்கவும் உதவும்.
🔹 புதிய முதலீட்டு வாய்ப்புகள்
“மல்டிபிள் ஸ்கீம் ஃப்ரேம்வொர்க் (MSF)” கீழ் குறைந்தபட்சம் இரண்டு முக்கிய திட்டங்கள் வழங்கப்பட வேண்டும்:
மிதமான அபாயத் திட்டம் (Moderate Risk): பங்கு முதலீடு ஓரளவுக்கே இருக்கும்.
அதிக அபாயத் திட்டம் (High Risk): 100% வரை பங்கு முதலீடு செய்யும் வாய்ப்பு. இது அதிக வருமானம் எதிர்பார்ப்போருக்கு உகந்தது.
மேலும், குறைந்த அபாயத் திட்டங்களையும் ஓய்வூதிய நிதிகள் தங்கள் விருப்பப்படி வழங்கலாம்.
🔹 தனிப்பயனாக்கப்பட்ட திட்டங்கள் & கட்டணங்கள்
புதிய விதிகளின் படி, நிறுவன ஊழியர்கள், டிஜிட்டல் பொருளாதார பணியாளர்கள், சுயதொழிலாளர்கள் போன்ற பல்வேறு குழுக்களுக்கு தனிப்பயனாக்கப்பட்ட திட்டங்கள் உருவாக்கப்படலாம்.
மொத்த ஆண்டு கட்டணம் AUM-ன் 0.30% ஐக் கடக்கக்கூடாது.
🔹 வெளியேற்றம் மற்றும் மாற்று விதிகள்
வெளியேற்ற விதிகள்: NPS-இல் இருந்து வெளியேறுவது மற்றும் வருடாந்திர ஓய்வூதியம் பெறுவது பழைய நடைமுறைகளின்படி தொடரும்.
மாற்று விதிகள்: புதிய MSF திட்டங்களில் இருந்து பொதுவான திட்டங்களுக்கு மாறலாம். ஆனால் புதிய திட்டங்களுக்குள் மாறுவதற்கு குறைந்தபட்சம் 15 ஆண்டுகள் நிறைவடைந்திருக்க வேண்டும் அல்லது ஓய்வூதிய வயதுக்கு வந்திருக்க வேண்டும்.

















