ஆரோக்கியம்
கிருஷ்ண ஜெயந்திக்கு சிறப்பு நெய் அப்பம் ரெசிபி – வீட்டிலேயே சுலபமாக செய்வது எப்படி?

கிருஷ்ண ஜெயந்தி சிறப்பு நெய் அப்பம் ரெசிபி
கிருஷ்ண பகவான் அவதரித்த தினம் கிருஷ்ண ஜெயந்தியாக பக்தர்களால் கொண்டாடப்படுகிறது. இந்நாளில் பாலுடன் செய்யப்பட்ட இனிப்புகள் மற்றும் பலகாரங்களை செய்து, பகவானுக்கு நிவேதனம் செய்வது வழக்கம். பால், நெய், வாழைப்பழம் போன்றவை கிருஷ்ணருக்கு மிகவும் பிடித்தவை என்பதால், மக்கள் இந்தச் சமயத்தில் இவற்றைக் கொண்டு பல்வேறு ரெசிபிகளை தயார் செய்கிறார்கள்.
இந்த ஆண்டு கிருஷ்ண ஜெயந்தியில் ஒரு சுவையான மற்றும் எளிதாக செய்யக்கூடிய பலகாரம் செய்து பகவானுக்கு படைக்க நினைத்தால், நெய் அப்பம் சிறந்த தேர்வாக இருக்கும். வாழைப்பழம், அரிசி மாவு, நெய் ஆகியவற்றைக் கொண்டு செய்யப்படும் இந்த அப்பம், சுவையிலும் மணத்திலும் அற்புதமாக இருக்கும். பண்டிகை நாளில் சட்டென்று செய்யக்கூடிய சிறந்த இனிப்பு இது.
தேவையான பொருட்கள்:
பொடித்த வெல்லம் – 3/4 கப்
தண்ணீர் – 1/4 கப் + 1/4 கப்
வாழைப்பழம் – 2 (நறுக்கியது)
ஏலக்காய் – 2
உப்பு – 1 சிட்டிகை
அரிசி மாவு – 1 கப்
ஆப்ப சோடா – 1 சிட்டிகை (விருப்பம்)
நெய் – தேவையான அளவு
செய்முறை:
ஒரு பாத்திரத்தில் பொடித்த வெல்லத்தை வைத்து, 1/4 கப் நீரை சேர்த்து மிதமான தீயில் கரைத்து, வடிகட்டி குளிரவிடவும்.
மிக்சரில் நறுக்கிய வாழைப்பழம், குளிர்ந்த வெல்லச் சாறு, ஏலக்காய், உப்பை சேர்த்து நன்கு அரைக்கவும்.
அதில் அரிசி மாவை சேர்த்து மீண்டும் மென்மையாக அரைத்து, ஒரு பாத்திரத்தில் எடுத்து 1/4 கப் நீரைச் சேர்த்து கலந்து, 2 மணி நேரம் ஊறவிடவும்.
2 மணி நேரம் கழித்து, விருப்பமிருந்தால் ஆப்ப சோடாவை 1 டேபிள் ஸ்பூன் நீருடன் கலந்து மாவில் சேர்த்து கிளறவும்.
பணியாரக் கல்லை சூடாக்கி, குழிகளில் நெய்யை ஊற்றி, மாவை ஊற்றவும்.
குறைந்த தீயில் பொன்னிறமாக வந்ததும் திருப்பி வேகவைத்து எடுத்துக் கொள்ளவும்.
அவ்வளவுதான்! பண்டிகை நாளில் பகவானுக்கு படைக்கவும், குடும்பத்துடன் சுவைக்கவும் சுவையான நெய் அப்பம் தயார்.


















