இந்தியா
ரூ. 1 லட்சம் மதிப்பிலான விவசாயக் கடன தள்ளுபடி.. முதியோர் பென்ஷன் இரட்டிப்பு.. கேசிஆர் அதிரடி..!

தெலுங்கானாவில் டிசம்பர் மாதம் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தெலுங்குகானா ராஷ்ட்ரா சமிதி கட்சிக்கு வாக்களித்தால் விவசாயிகளின் ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான கடன் தள்ளுபடி செய்யப்படும் என்றும் விவசாயிகளுக்குத் தற்போது பயிற் காலங்களில் அளிக்கப்பட்டு வரும் 8000 ரூபாய் உதவித் தொகை 10,000 ரூபாயாக அதிகரிக்கப்படும் என்றும் தற்போதைய முதல்வர் கே சி சந்திரசேகர ராவ் தெரிவித்துள்ளார்.
முதியோர் உதவி தொகை பெறுவதற்கான வயது தகுதி 65-ல் இருந்து 57 ஆகக் குறைக்கப்படும் என்றும் உறுதி அளித்தார்.
2014-ம் ஆண்டுத் தங்கள் ஆட்சி அமலுக்கு வந்ததில் இருந்து விவசாயிகளுக்குப் பல்வேறு வகையில் ஆதரவு அளித்து வருவதாகவும், அப்போது 1 லட்சம் மதிப்பிலான விவசாயக் கடன் தள்ளுபடியை கூறியதன் படி தள்ளுபடி செய்ததாகவும் குறிப்பிட்டார்.
விவசாயிகளின் தேவை அதிகம் உள்ளதால் இந்த முறையும் 1 லட்சம் ரூபாய் வரையிலான விவசாயக் கடன் தள்ளுபடி அளிப்பதாகவும் கேசிஆர் தெரிவித்துள்ளார். இவை மட்டும் இல்லாமல் மாற்றுத் திறனாளிகளுக்கான உதவித் தொகை உயர்வு, வேலையில்லா இளைஞர்களுக்கான உதவித் தொகை 3,000 ரூபாயாக அதிகரிப்பு உள்ளிட்டவையும் அறிவித்துள்ளனர்.
மேலும் அடுத்த 5 ஆண்டுகளில் தெலுங்கானாவின் வருவாய் 10.30 லட்சம் கோடியாக ஒவ்வொரு காலாண்டிலும் அதிகரிக்கும். அதில் 2.30 லட்சம் கோடி ரூபாய் கடன்களைத் திருப்புச் செலுத்தப் பயன்படுத்தப்படும் என்றும் கேசிஆர் கூறியுள்ளார்.



















