இந்தியா
ராகுல் காந்தி மேல்முறையீட்டு மனு தள்ளுபடி: சிறை தண்டனையை உறுதி செய்தது நீதிமன்றம்!

அவதூறு வழக்கில் விதிக்கப்பட்ட 2 ஆண்டுகள் சிறை தண்டனைக்கு தடை விதிக்க கோரி ராகுல் காந்தி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை குஜராத்தின் சூரத் கூடுதல் செஷன்ஸ் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. இதன் மூலம் ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனை உறுதியாகியுள்ளது.

#image_title
2019-இல் கர்நாடகாவின் கோலார் பகுதியில் தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய ராகுல் காந்தி, நீரவ் மோடி, லலித் மோடி, நரேந்திர மோடி என அனைத்து திருடர்களும் மோடி என்ற குடும்ப பெயரை வைத்திருக்கிறார்கள் என கூறியிருந்தார். இதனையடுத்து ராகுல் காந்தியை கைது செய்யக்கோரி பாஜக எம்எல்ஏ புர்னேஷ் குமார் என்பவர் குஜராத்தின் சூரத் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கின் தீர்ப்பில், ராகுல் காந்திக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனையும், 15,000 ரூபாய் ஆபராதமும் விதிக்கப்பட்டது. மேலும் ராகுல் காந்தியின் வேண்டுகோளுக்கு ஏற்ப அவருக்கு ஜாமீன் வழங்கி, 30 நாட்களுக்குள் மேல்முறையீடு செய்ய அவரது தண்டனையும் நிறுத்தி வைக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து எம்.பி. பதவியில் இருந்து ராகுல் காந்தி தகுதிநீக்கம் செய்யப்படுவதாக மக்களவை செயலகம் அறிவித்தது. இது தேசிய அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அவதூறு வழக்கில் சூரத் நீதிமன்றம் வழங்கிய இரண்டு ஆண்டு சிறைத் தண்டனையை எதிர்த்து ராகுல் காந்தி குஜராத் செஷன்ஸ் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். அதில் சூரத் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புகளை நிறுத்தி வைக்க வேண்டும் எனக் கூறப்பட்டு இருந்தது.
இந்த வழக்கின் விசாரணை 13-ஆம் தேதி நடைபெற்று தீர்ப்பு 20-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. இதனையடுத்து இன்று தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம் ராகுல் காந்தியின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இதனால் அவரது 2 ஆண்டுகள் சிறை தண்டனை உறுதியாகியுள்ளது. எம்பி பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டதும் உறுயாகியுள்ளது.