கிரிக்கெட்
5வது முறையாக U19 உலகக்கோப்பையை வென்று இந்தியா சாதனை !

19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டம் நேற்று நடைபெற்ற நிலையில் நேற்றைய போட்டியில் இந்திய அணி இங்கிலாந்து அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்துள்ளது.
ஏற்கனவே நான்கு முறை இந்திய அணி உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் சாம்பியன் பட்டம் பெற்ற நிலையில் நேற்றுடன் ஐந்தாவது முறையாக சாம்பியன் பட்டம் பெற்று கிரிக்கெட் உலகில் பெரும் சாதனை செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த 2000, 2008, 2012, 2018 ஆகிய நான்கு ஆண்டுகளில் 19 வயதுக்குட்பட்டோருக்கான உலக கோப்பையை இந்தியா வென்றுள்ளது. இந்த நிலையில் 2022ஆம் ஆண்டு உலகக் கோப்பையையும் வென்று ஐந்து முறை சாம்பியன் பட்டம் வென்ற அணி என்ற பெருமையை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
நேற்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 189 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதனை அடுத்து 190 என்ற இலக்கை நோக்கி விளையாடிய இந்திய அணி 6 விக்கெட் இழப்பிற்கு 195 ரன்கள் எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
உலக கோப்பை கிரிக்கெட் தொடரை வென்ற இந்திய அணிக்கு மூத்த கிரிக்கெட் வீரர்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.







