பிற விளையாட்டுகள்
நடுவர்களின் நியாயமற்ற முடிவால் தோல்வி: மேரி கோம் ஆவேசம்

ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வெல்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட இந்தியாவின் குத்துச்சண்டை வீராங்கனை மேரிகோம் நேற்று தோல்வி அடைந்த நிலையில் தனது தோல்வி நடுவர்களால் ஏற்பட்டது என்று மேரிகோம் தெரிவித்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பெண்களுக்கான 56 கிலோ எடைப் பிரிவில் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் இந்தியாவின் மேரி கோம் மற்றும் கொலம்பியா நாட்டின் இன்கிரிட் வலென்சியா ஆகியோர் மோதினர்.
இந்த போட்டியில் இருவரும் ஆக்ரோஷமாக விளையாடிய நிலையில் கடைசி ரவுண்டில் இருவரும் சரமாரியாக குத்துக்களை பரிமாறினர். இருப்பினும் நடுவர்களின் தீர்ப்பின்படி கொலம்பிய வீராங்கனை 3-2 என்ற கணக்கில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதனால் மேரி கோம் பதக்கம் வெல்லும் வாய்ப்பை இழந்தார்.
இந்தநிலையில் நடுவரின் தீர்ப்பு அதிருப்தி அடைய செய்திருப்பதாக மேரிகோம் கூறினார். முதல் ரவுண்டில் இருவரும் எங்களது வியூகத்திற்கு தகுந்தபடி விளையாடினோம் என்றும், அடுத்த இரண்டு ஆண்டுகளில் நான்தான் வெற்றி பெற்றேன் என்றும், ஆனால் நடுவர்கள் எந்த அடிப்படையில் கொலம்பிய வீராங்கனை வெற்றி பெற்றதாக முடிவை கூறினார்கள் என்பதை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை அவருடைய தீர்ப்பு மிகவும் மோசமாக உள்ளது என்றும் தெரிவித்தார்.
கொலம்பியா வீராங்கனை வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டதை என்னால் நம்ப முடியவில்லை என்று கூறிய மேரிகோம், ஒலிம்பிக் தூதர் பொறுப்பை ராஜினாமா செய்ய போவதாகவும் தெரிவித்தார். இந்த நிலையில் மேரி கோம் தான் வெற்றியாளர் என்றும் நடுவர்களின் புள்ளி கணக்கிடும் முறை வருத்தம் அளிப்பதாகவும் மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு அவர்களும் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.



