தமிழ்நாடு
முடங்கியது மும்பை: கனமழையால் 18 பேர் உயிரழப்பு!

மும்பை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை தொடர்ந்து பெய்து வருகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டு மும்பை முடங்கியுள்ளது. இதனால் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
மஹாராஷ்டிரா மாநிலம் மராத்வாடா, விதர்பா ஆகிய பகுதிகளில் கடந்த 5 நாட்களாக விடாது கனமழை பெய்து வருகிறது. இதுவரை மழை நின்றபாடில்லை. மேலும் மழை தொடரும் என கூறப்படுகிறது. தண்டவாளங்களில் மழை நீர் தேங்கியதால் பல்கார் மாவட்டத்தில் ரயில் போக்குவரத்து முடங்கியுள்ளது.
மும்பை தானே ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. கர்ஜ், லோனாவாலா பகுதிகளில் வெள்ளம் காரணமாக சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து ஏற்பட்டுள்ளது. வேலைக்கு செல்பவர்கள் வேலைக்கு செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர். மழை காரணமாக மும்பை போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் பள்ளி, கல்லூரிகள், அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
மேலும், கனமழை காரணமாக மும்பையின் கிழக்கு மலாட் பகுதியில் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில் 18 பேர் உயிரிழந்தனர். 13 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.















