வணிகம்
தங்கத்தின் விலை வரலாறு காணாத உயர்வு: கோல்ட் ஈடிஎஃப்களில் முதலீடு பெருமளவு அதிகரிப்பு!

தங்க முதலீடு மீண்டும் கவனத்தை ஈர்த்துள்ளது. உலகளவில் டாலரின் மதிப்பு குறைந்து வரும் நிலையில், தங்கம் மீண்டும் “சொத்துகளின் அரசன்” எனும் அந்தஸ்தை பெற்றுள்ளது. இதன் விளைவாக, இந்தியாவில் கோல்ட் ஈடிஎஃப்களில் (Gold ETFs) முதலீடு செய்வோர் கணிசமாக அதிகரித்து வருகின்றனர்.
கோல்ட் ஈடிஎஃப்களுக்கு அதிக தேவை:
வேர்ல்ட் கோல்ட் கவுன்சில் (WGC) வெளியிட்ட தகவலின்படி, 2025 ஆகஸ்ட் மாதத்தில் இந்தியாவின் கோல்ட் ஈடிஎஃப்களில் 23.3 கோடி டாலர் நிகர முதலீடு வந்துள்ளது. இது ஜூலையில் இருந்த 13.9 கோடி டாலரைவிட 67% அதிகம். இதுவரை 2025ஆம் ஆண்டில் மொத்தம் 1.23 பில்லியன் டாலர் முதலீடு வந்துள்ளது. 2024 முழுவதும் முதலீட்டளவு 1.29 பில்லியன் டாலர் என்பதைக் கருத்தில் கொண்டால், இந்த ஆண்டு சாதனை அளவு முதலீடு வரலாம் என நிபுணர்கள் கணிக்கின்றனர்.
தங்கம் vs டாலர்:
30 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக, உலக மத்திய வங்கிகளின் இருப்பில் தங்கம், அமெரிக்க கருவூலத்தை (US Treasury) விஞ்சி முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது. தற்போது உலகளாவிய அன்னியச் செலாவணி இருப்புகளில் தங்கம் 20% பங்கைக் கொண்டுள்ளது. அதே சமயம், யூரோவின் பங்கு 16% ஆகக் குறைந்துள்ளது. அமெரிக்க டாலர் இன்னும் 46% பங்குடன் முதலிடத்தில் இருந்தாலும், அதன் ஆதிக்கம் தொடர்ந்து குறைந்து வருகிறது. 2025 ஆம் ஆண்டில் மட்டும் டாலரின் மதிப்பு 10% சரிந்துள்ளது.
தங்கத்தின் விலையில் சாதனை உயர்வு:
2025 ஆம் ஆண்டில் தங்கத்தின் விலை 36% உயர்ந்து, ஒரு அவுன்ஸ் 3,592 டாலர் (தோராயமாக 10 கிராம் ரூ.1,07,920) என்ற ஆல்-டைம் ஹையை எட்டியுள்ளது. ஐசிஐசிஐ வங்கி கணிப்பின்படி, 2026 நடுப்பகுதியில் 10 கிராம் தங்கத்தின் விலை ரூ.1,25,000 ஆக உயர வாய்ப்பு உள்ளது. கோல்ட்மேன் சாக்ஸ் கணிப்பின்படி, அமெரிக்க கருவூல முதலீட்டாளர்களில் 1% பேர் கூட தங்கத்தில் முதலீடு செய்தால், ஒரு அவுன்ஸ் தங்கம் 5,000 டாலர் வரை செல்லலாம்.
டாலரின் நம்பகத்தன்மை ஏன் குறைகிறது?
அமெரிக்காவின் அதிகரிக்கும் கடன்
பெடரல் ரிசர்வின் சுதந்திரம் குறித்த சந்தேகம்
உலகளாவிய வர்த்தகப் போர்கள்
ரஷ்யா – உக்ரைன் போர்
இந்த காரணங்களால் மத்திய வங்கிகள் தொடர்ந்து தங்கத்தை வாங்கி வருகின்றன. 2022 முதல் ஆண்டுதோறும் 1,000 டன்களுக்கும் அதிகமான தங்கம் வாங்கப்படுகிறது, இது 2020 க்கு முன் இருந்ததை விட இருமடங்கு அதிகம்.
முதலீட்டாளர்களுக்கான அறிவுரை:
நிபுணர்கள் கூறுவதாவது, தங்கம் இனி பணவீக்கத்திலிருந்து பாதுகாப்பு அளிக்கும் கருவி மட்டுமல்ல; முக்கிய முதலீட்டுக் கருவியாகவும் மாறி வருகிறது. எனவே சாதாரண முதலீட்டாளர்களும் தங்கள் போர்ட்ஃபோலியோவில் தங்கத்தைச் சேர்க்க பரிந்துரைக்கப்படுகிறார்கள்.



















