தமிழ்நாடு
ஆகஸ்ட் 30ஆம் தேதியுடன் சுங்கவரி வசூல் நிறுத்தம்: தமிழக அரசு அறிவிப்பு!

ஆகஸ்ட் 30ஆம் தேதியுடன் சுங்கவரி வசூல் செய்வது நிறுத்தம் செய்யப்படும் என தமிழக அரசு அதிரடியாக அறிவித்துள்ளதால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழகத்தில் உள்ள சுங்கச்சாவடிகளில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாகவும், சுங்கச்சாவடிகளை நீக்க வேண்டும் என்றும் தமிழர் வாழ்வுரிமை கட்சி உள்பட பல அரசியல் கட்சிகள் கோரிக்கை விடுத்து வருகின்றன.
இந்த நிலையில் இன்று திமுக எம்எல்ஏ துரை சந்திரசேகரன் அவர்கள் சட்டசபையில் பேசிய போது பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயணம் போல தமிழ்நாட்டில் சுங்கச்சாவடிகளை அகற்றி, கட்டணமின்றி வாகனங்கள் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
இந்த நிலையில் சென்னை ஓஎம்ஆர் சாலையில் பெருங்குடி, துரைப்பாக்கம், மேடவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள நான்கு சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூலிக்கப்படுவது ஆகஸ்ட் 30ஆம் தேதியுடன் நிறுத்தப்படுவதாக தமிழக அரசின் பொதுப்பணித்துறை அறிவித்துள்ளது.
சென்னை மெட்ரோ ரயில் பணிகள் தொடங்கப்படுவதை அடுத்து ராஜீவ்காந்தி சாலையில் உள்ள பெருங்குடி, துரைப்பாக்கம், கலைஞர் சாலை மற்றும் மேடவாக்கம் ஆகிய 4 சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூலிக்கப்படுவது ஆகஸ்ட் 30ஆம் தேதி முதல் நிறுத்தப்படுகிறது என தமிழக அரசின் பொதுப்பணித்துறை தெரிவித்துள்ளது.














