தமிழ்நாடு
பப்ஜி மதன் வழக்கில் 1600 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிக்கை: நீதிமன்றத்தில் தாக்கல்!

பப்ஜி மதன் வழக்கில் 1600 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக சற்றுமுன் தகவல் வெளிவந்துள்ளது.
தடை செய்யப்பட்ட பப்ஜி விளையாட்டை குழந்தைகள் மற்றும் இளம் பெண்களுக்கு கற்றுத்தருவது மற்றும் அவர்களுடன் பாலியல் தொல்லையில் ஈடுபட்டது உள்பட பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு ஆளான பப்ஜி மதன், முறைகேடாக பலரிடம் கோடிக்கணக்கில் பணம் வசூலித்ததாகவும் அந்த பணத்தில் ஆடி கார் உள்பட பல ஆடம்பர செலவுகள் செய்ததாகவும் கூறப்பட்டது.
இதனை அடுத்து பப்ஜி மதனை கைது செய்த போலீசார் அவருடைய வங்கிக் கணக்கை முடக்கினர் என்பதும் அவருடைய இரண்டு ஆடம்பர ஆடி காரை பறிமுதல் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. மதன் மட்டுமின்றி அவரது மனைவியும் கைது செய்யப்பட்டார் என்றும் ஆனால் அவர் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் பப்ஜி மதன் குறித்த வழக்கை விசாரணை செய்து வந்த சைபர் க்ரைம் காவல்துறையினர் தற்போது 1600 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர்.
சைபர் கிரைம் போலீஸார் தாக்கல் செய்த இந்த குற்றப்பத்திரிகையில் பப்ஜி மதன் பலருக்கும் உதவி செய்வதாகக் கூறி 2848 நபர்களிடம் 2.89 கோடி வாங்கியதாக குற்றம் சாட்டப்பட்டு உள்ளது. மேலும் இந்த வழக்கில் 30 சாட்சிகளின் வாக்குமூலம் இருப்பதாகவும் தெரியவந்துள்ளது. பப்ஜி மதன் வழக்கில் 45 நாட்களில் குற்றப்பத்திரிகையை சென்னை சைபர் கிரைம் போலீசார் தாக்கல் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
















