தமிழ்நாடு
புதிய மாவட்டமாக உருவாகிறது கள்ளக்குறிச்சி: எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கள்ளக்குறிச்சியை இன்று சட்டப்பேரவையில் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தனிமாவட்டமாக அறிவித்தார்.
2019-ஆம் ஆண்டுக்கான தமிழக சட்டமன்றக் கூட்டத்தொடர் கடந்த 2-ஆம் தேதி முதல் ஆளுநர் உரையுடன் தொடங்கியது. இதில் இன்று ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பதிலுரை ஆற்றினார். அப்போது சட்டத்துறை அமைச்சர் சிவி சண்முகம் மற்றும் கள்ளக்குறிச்சி தொகுதி எம்எல்ஏ குமரகுரு ஆகியோரின் கோரிக்கையை ஏற்று விழுப்புரம் பெரிய மாவட்டமாக இருப்பதால் கள்ளக்குறிச்சி தனிமாவட்டமாக உருவாக்கப்பட இருப்பதாக அறிவித்தார்.
மேலும், விரைவில் உருவாகும் கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு புதிய ஐஏஎஸ் அதிகாரி நியமிக்கப்படுவார் என்றும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார். ஏற்கனவே தமிழகத்தில் 32 மாவட்டங்கள் உள்ள நிலையில் புதிதாக அமைய உள்ள கள்ளக்குறிச்சி 33-வது மாவட்டமாக அமைய உள்ளது.



















