சினிமா
“‘பத்து தல’ படத்தை கைவிட முடிவு செய்தோம்”- இயக்குநர் ஓபிலி கிருஷ்ணா!

‘பத்து தல’ படத்தின இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது.
இதில் இயக்குநர் ஓபிலி கிருஷ்ணா பேசியதாவது, “‘பத்து தல’ படத்தின் வாய்ப்பைக் கொடுத்தது தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா தான். ஆனால், சூழ்நிலை காரணமாக இந்த படத்தை கைவிட வேண்டிய நிலையில் இருந்தது. கௌதம் கார்த்திக் உடைய போர்ஷன் அனைத்தையும் முடித்து விட்டோம். சிம்பு அடுத்த ஷெட்யூலுக்காக தயாராகி கொண்டிருக்கிறார். இப்படியான சூழ்நிலையில் நியாயமான காரணங்களால் படத்தை கைவிட வேண்டிய நிலையில் யாரிடமும் சொல்ல முடியாமல் குழப்பத்தில் இருந்தோம். ஏற்கனவே என்னுடைய இரண்டு படங்கள் கைவிடப்பட்டு விட்டது.
அதேபோலவே இந்த படமும் கைவிட்டால் எனக்கும் மிகப்பெரிய இழப்புதான். சினிமாவில் அதிகம் சென்டிமென்ட் பார்ப்பார்கள். பிறகு ஞானவேல் ராஜாவிடம் நான் பேசினேன். ஒரு முடிவை எடுத்தால் அதை மாற்றாதவர் ஞானவேல் ராஜா. ஆனால் அந்த பத்து நிமிடங்கள் அவர் மனதை மாற்றியது எது என தெரியவில்லை. இது அனைத்தும் கடவுளின் அருள்தான் நேற்று கூட டிரைய்லரை முடித்து விட்டு ரஹ்மான் சாரிடம் கேட்டேன். அவர் செய்துவிடலாம் என பாசிட்டிவாக பேசி செய்து கொடுத்திருக்கிறார்.
எஸ் டி ஆர்- ஐ பற்றி பேச வேண்டும் என்றால் அவருடைய நண்பராக நான் சொல்கிறேன். எனக்கும் அவருக்கும் 20 வருட பழக்கம். அவருடைய ‘தம்’ படத்திற்கு பிறகு நான் படம் இயக்க வேண்டியது. அது தள்ளி போய் இப்போது தான் நடந்திருக்கிறது. படப்பிடிப்பில் மிகவும் தயாராக இருப்பார். வசனங்களை முந்தின நாள் இரவே வாங்கி படித்துவிட்டு ஸ்பாட்டுக்கு வருவார்.
என் மேல் மிகுந்த நம்பிக்கை வைத்திருந்தார். அந்த விஷயம்தான் இந்தப் படத்தை நான் நினைத்ததுபோல எடுக்க வைத்தது. கெளதம் கார்த்திக்கை நான் நிறைய படுத்தி இருக்கிறேன். ஆனாலும் அவ்வளவு பொறுமையாக இருப்பார். ரஹ்மான் சார் பற்றி நான் பேச வேண்டும் என்றால் நிறைய கதைகள் இருக்கிறது. அவரைப் பார்த்து நிறைய விஷயங்கள் நான் மாறி இருக்கிறேன். நன்றி சார்”.