தமிழ்நாடு
அதானி வாங்கிய கடன் எவ்வளவு.. சொல்ல மறுத்த நிர்மலா சீதாராமன்.. பாயும் சு. வெங்கடேசன்

சென்னை: அதானி குழுமம் பெற்றுள்ள கடன் குறித்த விவரங்களை உடனே வெளியிட வேண்டும் என்று சிபிஎம் எம்பி சு வெங்கடேசன் கோரிக்கை விடுத்துள்ளார்.
பறி கொடுத்தவர்கள் பக்கம் இல்லாமல் பறித்தவர் பக்கம் இருக்குமானால் சட்டத்தை மாற்றுங்கள் என்ற தலைப்பில் சு. வெங்கடேசன் எம் பி அறிக்கை வெளியிட்டுள்ளார்.

adani1
அதில், அதானி குழுமம் வங்கிகளில், அரசு இன்சூரன்ஸ் நிறுவனங்களில் எவ்வளவு கடன் வாங்கி இருக்கிறது என்று நாடாளுமன்றத்தில் தீபக் பைஜ் என்கிற உறுப்பினர் கேள்வி (எண் 177/13.03.2023) எழுப்பி இருந்தார்.
அதற்கு பதில் அளித்த நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வங்கிகளின் கடன் குறித்து எந்த விவரத்தையும் தரவில்லை. ரிசர்வ் வங்கி சட்டம் 1934 பிரிவு 45 E இன் படி வங்கிக் கடன் குறித்த விவரங்கள் ரகசியமானவை, அவற்றை வெளியிட இயலாது என மறுத்துள்ளார். குடியுரிமை குறித்தே சட்ட திருத்தம் வருகிறது. ஒரு மாநிலத்திற்கு இருக்கிற விசேட அந்தஸ்து பறிக்கப்பட்டு ஒன்றிய ஆளுகைப் பகுதியாக மாற்றப்பட முடிகிறது. விவசாயிகளை கொந்தளிக்க வைத்த 3 சட்டங்களை நிறைவேற்ற முடிந்தது. பின்னர் திரும்பப் பெற வேண்டியும் வந்தது. ஆனால் தங்களின் பல்லாயிரம் கோடி சேமிப்பு என்ன ஆகும் என்று மக்கள் பதறும் போதும் சட்டத்தின் கீழ் ஒளிந்து கொண்டு ரகசியம் என்கிறது ஒன்றிய அரசு. சட்டம் குறுக்கே வந்தால் சட்டத்தை திருத்துங்கள் நிதி அமைச்சரே,
எல்.ஐ.சி அதானி குழுமத்திற்கு தந்துள்ள கடன் டிசம்பர் 31, 2022 அன்று ரூ 6347 கோடிகள். மார்ச் 5, 2023 அன்று ரூ 6182 கோடிகள். எல். ஐ. சி தந்துள்ள கடன் பாலிசிதாரர்களின் சேமிப்புகள்தான்.
கடன்கள் எல்லா முன் எச்சரிக்கைகளையும் கணக்கிற் கொண்டு வழங்கப்பட்டு
இருப்பதாக இந்த அரசு நிதி நிறுவனங்கள் விளக்கம் தருகின்றன. ஆனால் அதானியின்
நம்பகத்தன்மை கிழிந்து தொங்குகிறது. ஆகவே அதானி நிறுவனங்களில் உள்ள முதலீடு
கடன் பற்றி விசாரணை தேவை.
வங்கிகள் வழங்கியுள்ள கடன் எல்.ஐ.சி தந்திருப்பது போல நிச்சயம் பல மடங்கு இருக்கும். இது மக்கள் பணம். அதை எவ்வளவு யாருக்கு வங்கிகள் தந்திருக்கின்றன. என்பதை அறிந்து கொள்ளும் உரிமை மக்களுக்கு உண்டு.
நிதியமைச்சரே….
பறி கொடுத்தவர்கள் பக்கம் சட்டம் இல்லாமல் பறித்தவர் பக்கம் இருக்குமானால் அதை திருத்துங்கள். மக்களுக்கு சொல்லுங்கள் அவர்கள் சேமிப்பின் கதி என்ன? பணத்திற்கு பாதுகாப்பு என்ன?
அதானியின் ஊழல் குறித்து நாடாளுமன்ற கூட்டுக்குழுவின் விசாரனைக்கு உத்தரவிடுங்கள், என்று கூறியுள்ளார்.