தமிழ்நாடு
தமிழக ஆளுநரை மத்திய அரசு உடனடியாக திரும்ப பெற டெல்லியில் திமுக வலியுறுத்தல்!

தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்துக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளிக்காமல் திரும்ப அனுப்பியுள்ள நிலையில் தமிழக ஆளுநரை உடனையாக மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் என நாடாளுமன்ற திமுக குழுத்தலைவர் டி.ஆர்.பாலு வலியுறுத்தியுள்ளார்.

#image_title
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு இன்று தொடங்கியது. இந்நிலையில் நாடாளுமன்ற திமுக குழுத்தலைவர் டி.ஆர்.பாலு டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர், நாடாளுமன்றத்தில் ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா குறித்து விவாதிக்க அனுமதி வழங்கப்படவில்லை.
மக்களை காப்பாற்ற வேண்டும் என்பதற்காக ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவை தமிழ்நாடு அரசு கொண்டு வந்தது. சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதா செல்லாது என்று கூற ஆளுநருக்கு உரிமை இல்லை. ஆன்லைன் சூதாட்ட மசோதாவை நிறைவேற்ற மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளதாக ஒன்றிய அரசு கூறியுள்ளது.
ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவை 4 மாதங்கள் கிடப்பில் வைத்து விட்டு ஆளுநர் திருப்பி அனுப்பியது சரியல்ல. ஆளுநரின் செயலை ஒன்றிய அரசு கண்டும் காணாததுபோல இருக்கிறது. மக்களின் உயிரை காப்பாற்ற வேண்டிய ஒன்றிய அரசு அலட்சியமாகச் செயல்பட்டு வருவது கண்டனத்துக்குரியது. ஆளுநரை ஒன்றிய அரசு உடனடியாக திரும்பப்பெற வேண்டும் என தெரிவித்தார்.