இந்தியா
இரவு முழுவதும் சட்டமன்றத்தில் தூங்கி தர்ணா போராட்டம் செய்த எம்.எல்.ஏக்கள்!

கர்நாடக சட்டசபையில் இரவு முழுவதும் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் சட்டமன்றத்திலேயே தூங்கி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கர்நாடக மாநில அமைச்சர் ஈஸ்வரப்பா சமீபத்தில் காவிக்கொடி இந்திய நாட்டின் தேசிய கொடியாக மாறும் நாள் வெகு தொலைவில் இல்லை என கூறினார். அவரது இந்த பேச்சுக்கு கடும் கண்டனம் தெரிவித்த காங்கிரஸ் எம்எல்ஏக்கள் அவர் பதவி விலக வேண்டுமென வலியுறுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று சட்டப்பேரவை கூடியதில் இருந்து காங்கிரஸ் எம்எல்ஏக்கள் அமைச்சர் ஈஸ்வரப்பா பதவி விலக வேண்டும் என்று கூறினார்கள். மேலும் சட்டப்பேரவை தொடரில் மற்ற அலுவல்கள் நடைபெற முடியாத வகையில் முடக்கிய காங்கிரஸ் எம்எல்ஏக்களால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் நேற்று சட்டமன்றம் முடிந்த பின்னரும் ஒருசில காங்கிரஸ் எம்எல்ஏக்கள் அவையை விட்டு வெளியே செல்லாமல் உள்ளேயே இருந்தனர். அவர்களை வெளியே செல்லும்படி காவலர்கள் வலியுறுத்தியும் அவர்கள் வெளியேறவில்லை .
மேலும் நேற்று விடிய விடிய சட்டமன்றத்திலேயே படுத்து தூங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர். காவி கொடி நாட்டின் தேசிய கொடியாக பேசிய கர்நாடக அமைச்சர் ஈஸ்வரப்பா பதவி விலகும் வரை தங்களது போராட்டம் தொடரும் என காங்கிரஸ் எம்எல்ஏக்கள் போராட்டம் நடத்தி வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.








