இந்தியா
மேற்கு வங்கத்தில் 8 பேர் உயிரோடு எரித்துக் கொலை.. உண்மை கண்டறியும் குழுவை அனுப்பும் பாஜக!

மேற்கு வங்கத்தில் பஞ்சாயத்துத் துணைத் தலைவர் கொலை செய்யப்பட்ட ஆத்திரத்தில் 8 பேர் உயிரோடு எரித்துக் கொலை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் குறித்து விசாரணை அறிக்கையை மத்திய அரசு கேட்டுள்ளது. மற்றொரு பக்கம் பாஜகவிலிருந்து உண்மை கண்டறியும் குழு ஒன்றும் மேற்கு வங்கத்துக்கு அனுப்பப்பட உள்ளது. மம்தா பேனர்ஜி மேற்கு வங்கத்தில் 3வது முறையாகப் பதவியேற்றதிலிருந்து தொடர்ந்து அங்கு வன்முறைச் சம்பவங்கள் அதிகரித்து வருவதாகக் குற்றம்சாட்டப்பட்டு வருகிறது.
செவ்வாய்க்கிழமை திருணாமுல் காங்கிரஸ் பஞ்சாயத்துத் தலைவர் பாது ஷேக் கொலை செய்யப்பட்ட உடல் கிடந்தார். தொடர்ந்து அந்த ஆத்திரத்தில் ஒரு கும்பல் வெடிகுண்டுகளை வீசியதாகக் கூறப்படுகிறது. அதில் போக்டுய் கிராமத்தில் உள்ள 10 வீடுகள் எரிந்துள்ளது. 8 பேர் இதுவரையில் இறந்துள்ளனர். 11 பேர் இந்த சம்பவம் தொடர்பாகக் கைது செய்யப்பட்டு விசாரணை செய்து வருகிறது காவல் துறை.
மேற்கு வங்கத்தின் சிறப்புக் காவல் துறை அதிகாரி மனோஜ் மாளவியா தலைமையில் சிறப்புப் புலனாய்வுக் குழு ஒன்று அமைக்கப்பட்டு இந்த சம்பவம் குறித்து விசாரணை செய்யப்பட்டு வருகிறது.
மாநில அமைச்சர் ஃபிர்ஹாத் ஹகீம் தலைமையிலான 2 பேர் கொண்ட திருணாமுல் காங்கிரஸ் குழு, இந்தப் பிரச்சினையை ஆராய ராம்பூர்ஹாட் சென்றுள்ளது. உள்ளூர் காவல்துறை அதிகாரிகள் 2 பேர் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவத்தின் பின்னணியில் திருணாமுல் காங்கிரஸ் இருப்பதாக பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றனர். அதனை திருணாமுல் காங்கிரஸ் கட்சி தொடர்ந்து மறுத்து வருகிறது. இந்த மரணம் மிகவும் கொடூரமானது என விவரித்துள்ள மேற்கு வங்க ஆளுநர், மேற்கு வங்கம் கொடூரமான கலாச்சாரக் கும்பல் பிடியிலிருப்பதாக கூறியுள்ளார்.

விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில் ஆளுநர் தேவையற்ற அறிக்கைகளை வெளியிடுவதைத் தவிர்க்குமாறு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கேட்டுக்கொண்டுள்ளார். மேலும் இதுபோன்ற கருத்துக்கள் தேவையற்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும். அரசுக்கு எதிராகப் பிற அரசியல் கட்சிகளை தூண்டுவது போலவும் அவரது கருத்துக்கள் உள்ளது என அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
மாநிலச் சட்டசபையில் இது குறித்து முதல்வரின் அறிக்கையைக் கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்ட பாஜக, வெளிநடப்பு செய்தது. மக்களவையில் இந்த சம்பவம் குறித்து கேள்வி எழுப்பிய காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, மேற்கு வங்கத்தில் இதுபோன்ற “பெண்கள் மற்றும் குழந்தைகளை உயிருடன் எரிக்கும் கொடூரமான சம்பவங்கள்” நடைபெற்று வருகின்றன என தெரிவித்துள்ளார்.

மேற்கு வங்கத்திலிருந்து மத்திய உள்துறை அமைச்சரை அமித் ஷாவை சந்தித்த பாஜகவைச் சேர்ந்த குழுவினர், அவர் இது குறித்து விசாரிக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர். பாஜக தலைவர் ஜேபி நட்டா மாநில பாஜக தலைவர் சுகந்தா மஜும்தார் தலைமையில் உண்மை கண்டறியும் குழு ஒன்றையும் சம்பவ இடத்திற்கு அனுப்பியுள்ளார்.
இந்த சம்பவம் திருணாமுல் காங்கிரஸ், பாஜக இடையில் மோதலாக உருவாகி வருவது குறிப்பிடத்தக்கது.






