தமிழ்நாடு
மாநில அரசின் மொழியில் தான் மத்திய அரசு பதிலளிக்க வேண்டும்: நீதிமன்றம் உத்தரவு

மாநில அரசு எந்த மொழியில் விண்ணப்பம் அனுப்புகிறதோ, அந்த மொழியில் தான் மத்திய அரசு பதிலளிக்க வேண்டும் என மதுரை ஐகோர்ட் அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மாநில அரசு தங்களுடைய தாய் மொழியில் அல்லது ஆங்கிலத்தில் விண்ணப்பத்தை மத்திய அரசுக்கு அனுப்பினால் அந்த விண்ணப்பத்திற்கு மத்திய அரசிடம் இருந்து பெரும்பாலும் இந்தியில்தான் பதில் வருகிறது. எனவே மாநில அரசு அதிகாரிகளுக்கு மத்திய அரசு அனுப்பிய பதிலில் விவரங்கள் புரியாமல் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இந்த நிலையில் இதுகுறித்து மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று பதிவு செய்யப்பட்டது. மாநில அரசு தமிழ் மொழியில் விண்ணப்பம் அனுப்பினால் அதே மொழியில் தான் மத்திய அரசு பதில் அளிக்க வேண்டும் என்ற இந்த வழக்கு கடந்த சில நாட்களாக நடந்து வந்த நிலையில் தற்போது இந்த வழக்கில் அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு மற்றும் அதன் அலுவலர்கள் இந்திய அலுவல் மொழிச் சட்டத்தை முறையாக பின்பற்ற வேண்டும் என்று மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. ஒரு மாநில அரசு எந்த மொழியில் மத்திய அரசுக்கு விண்ணப்பம் அனுப்புகிறதோ, அதே மொழியில் தான் மத்திய அரசு பதில் அளிக்க வேண்டும் என்றும், இந்திய அலுவலக மொழி சட்டமும் இதைத்தான் உறுதி செய்கிறது என்றும் நீதிபதி தனது உத்தரவில் தெரிவித்துள்ளார்.
இதனால் இனிமேல் தமிழக அரசிடம் இருந்து தமிழில் விண்ணப்பம் மத்திய அரசுக்கு சென்றால் மத்திய அரசும் தமிழில்தான் பதிலளிக்க வேண்டும் என்பது உறுதியாகிறது.














