தமிழ்நாடு
எடப்பாடி பழனிசாமி மீது செல்ஃபோன் திருட்டு வழக்கு… தலைகுனிவு… வெட்கக்கேடு… பிரேமலதா விஜயகாந்த் அதிருப்தி!

தமிழக முன்னாள் முதல்வரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி குறித்து ஃபேஸ்புக் நேரலையில் துரோகத்தின் அடையாளம் எடப்பாடியார் என பேசிய அமமுக பிரமுகரின் செல்ஃபோன் பறிக்கப்பட்டு அவரை அதிமுகவினர் தாக்கிய விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட சில அதிமுகவினர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது குறித்து தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் அதிருப்தி தெரிவித்துள்ளார்.

#image_title
எடப்பாடி பழனிசாமி மீது அமமுக பிரமுகர் அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர். இதனை கண்டித்து அதிமுகவினர் நேற்று மதுரையில் தமிழக அரசையும், காவல்துறையையும் கண்டித்து ஆர்ப்பட்டம் நடத்தினர். இந்நிலையில் எடப்பாடி பழனிசாமி மீது செல்ஃபோன் திருட்டு வழக்கு போட்டுள்ளதை தலைகுனிவாகவும் வெட்கக் கேடாகவும் பார்க்கிறேன் என தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார்.
சென்னை மாதவரத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பின் செய்தியாளர்களைச் சந்தித்த பிரேமலதா விஜயகாந்த், எடப்பாடி பழனிசாமி மீது செல்ஃபோன் திருட்டு வழக்கு போடப்பட்டுள்ளது. இதை தலைகுனிவாகவும் வெட்கக்கேடாகவும் பார்க்கிறேன். அவர் முன்னாள் முதலமைச்சராக இருந்தவர். வழக்கை பதிவு செய்வதற்கு முகாந்திரம் இருக்க வேண்டும்.
கீழ்த்தரமான அரசு நடக்கிறது என்பதற்கு இது ஒன்றே உதாரணம். செல்ஃபோனை திருடி பிழைக்க வேண்டும் என்று அவருக்கு என்ன வந்தது. முதலமைச்சராக இருந்தவர் மீது முகாந்திரம் கொண்ட வழக்குகள் பதிந்தால் அது சரி. இதுபோன்ற வழக்கை பதியும் போது அவர்கள் தரத்தை அவர்களே தாழ்த்திக் கொள்கிறார்கள் என்றார்.