இந்தியா
இந்திய போர்க்கப்பலில் வெடிவிபத்து: 3 கடற்படை வீரர்கள் பலி!

மும்பையில் உள்ள கடற்படை தளத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இந்திய போர்க் கப்பலில் திடீரென ஏற்பட்ட வெடி விபத்து காரணமாக மூன்று கடற்படையினர் பலியாகி இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மும்பையில் உள்ள டாக்யார்டு ரோடு என்ற கடற்படைத் தளத்தில் ஏராளமான கடற்படைக்குச் சொந்தமான கப்பல்கள் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன. அதில் ஐ.என்.எஸ் ரன்வீர் என்ற கப்பலில் திடீரென வெடி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 3 கடற்படையினர் உயிரிழந்ததாகவும் 11 பேர் காயமடைந்ததாகவும் காயமடைந்தவர்கள் கடற்படைக்கு சொந்தமான மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் மீட்பு படையினர் தெரிவித்துள்ளனர்.
இந்திய போர் கப்பலில் ஏற்பட்ட வெடி விபத்தை தொடர்ந்து அந்த கப்பல் தீப்பிடித்ததாகவும் இதனை அடுத்து மீட்பு படையினர் விரைந்து வந்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்ததாகவும் கப்பலுக்கு பெரிய அளவில் சேதம் எதுவும் இல்லை என்றும் கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து கடற்படை வெளியிட்டுள்ள அறிவிப்பு ஒன்றில் மும்பையில் உள்ள கடற்படை தளத்தில் ஏற்பட்ட வெடிவிபத்து துரதிஷ்டமானது என்றும் இந்த விபத்தில் பலியான 3 வீரர்களுக்கும் இரங்கல் தெரிவிப்பதாகவும் தெரிவித்திருந்தது. மேலும் இதுகுறித்து விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் விசாரணைக்கு பின்னரே விடுவதற்கான காரணம் தெரியவரும் என்றும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் மும்பையில் நடு கடலில் ஒரு கப்பல் திடீரென தீப்பிடித்து எரிந்ததில் மூன்று பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.