தமிழ்நாடு
நிச்சயம் எதிர்வினை இருக்கும்: எடப்பாடி பழனிசாமிக்கு அண்ணாமலை எச்சரிக்கை!

கடந்த இரண்டு தினங்களாக பாஜக – அதிமுக இடையே உரசல் நீடித்து வருகிறது. பாஜகவின் முக்கிய நிர்வாகிகள் சிலர் அதிமுகவில் தங்களை இணைத்து வருகின்றனர். இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக தலைவர் அண்ணாமலை அதிமுகவுக்கு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.

#image_title
தமிழக பாஜக ஐடி விங் தலைவராக இருந்த சிடிஆர் நிர்மல்குமார், சமீபத்தில் அண்ணாமலை மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்து அவரை விமர்சித்துவிட்டு பாஜகவில் இருந்து விலகி எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் தன்னை இணைத்துக்கொண்டார். அவரைத்தொடர்ந்து ஐடி விங் மாநில செயலாளர் திலிப் கண்ணனும் அண்ணாமலையை விமர்சித்து விட்டு எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார்.
மேலும் சில பாஜக நிர்வாகிகளும் பாஜகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்தனர். இவை அனைத்தும் பாஜக-அதிமுக கூட்டணியை விரிசல் அடைய வைத்துள்ளனர். இந்நிலையில் செய்தியாளர்கள் சந்திப்பில் பாஜக நிர்வாகிகள் விலகி அதிமுகவில் இணைவது குறித்து பேசினார் அண்ணாமலை.
அப்போது, திராவிடக் கட்சிகளின் இந்த செயல் பாஜகவின் வளர்ச்சியைதான் காட்டுகிறது. திராவிடக் கட்சிகளை சார்ந்துதான் பாஜக வளரும் என்ற குற்றச்சாட்டு இருந்தது. ஆனால் இன்று பாஜகவில் இருந்து ஆட்களை எடுத்து சென்றால் தான் திராவிட கட்சிகள் வளரும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. பாஜகவினரை இணைத்துக்கொண்டு தாங்கள் வளர்ந்துவிட்டதாக காட்ட அதிமுக முயற்சிக்கிறது. பாஜகவில் இருந்து யாரை வேண்டுமானாலும் இழுத்துச் செல்லட்டும். அவர்களின் ஒவ்வொரு வினைக்கும், நிச்சயம் எதிர்வினை இருக்கும் என எடப்பாடி பழனிசாமிக்கு எச்சரிக்கை விடுத்தார் அண்ணாமலை.