கிரிக்கெட்
இந்திய இளம் வீரர் சாதனை: சச்சினுக்கு அடுத்து பிரித்விஷா சாதனை சதம்!

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் வந்துள்ள மேற்கு இந்திய தீவுகள் அணி தனது டெஸ்ட் தொடரை இன்று ஆரம்பித்தது. ராஜ்கோர்ட்டில் இன்று தொடங்கிய முதல் நாள் ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.
தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும் இந்த முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியாவின் பிரித்விஷா தனது முதல் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டியை ஆரம்பித்தார். தொடக்க ஆட்டக்காரராக களம் இறங்கிய பிரித்விஷா நிதானமாக விளையாடி, தனது அறிமுக போட்டியிலேயே சதத்தை கடந்து பல சாதனைகளை படைத்துள்ளார்.
15 பவுண்டரிகளுடன் 99 பந்தில் சதத்தை கடந்தார் பிரித்விஷா. சச்சினை அடுத்து இளம் வயதிலேயே சர்வதேச கிரிக்கெட்டில் சதம் அடித்த இரண்டாவது இந்திய வீரர் என்ற பெருமையை தன்வசமாக்கினார் பிரித்விஷா. மேலும் டெஸ்டில் சதத்தை கடந்த 4-வது இளம் வீரர் என்றும் சாதனை படைத்துள்ளார்.
99 பந்துகளில் சதம் கடந்த பிரித்விஷா அறிமுக போட்டியில் குறைந்த பந்தில் சதம் கடந்த மூன்றாவது வீரர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.
அறிமுக போட்டியில் 154 பந்துகளை சந்தித்த பிரித்விஷா 134 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். தற்போது வரை இந்திய அணி 77 ஓவர்கள் முடிந்துள்ள நிலையில் 314 ரன்னுக்கு 3 விக்கெட்டை இழந்து தொடர்ந்து விளையாடி வருகிறது.


















