விமர்சனம்
’துணிவு’: வங்கி கொள்ளையில் இவ்வளவு விஷயம் சொல்ல முடியுமா? அஜித்தை வைத்து மாஸ் செய்த எச் வினோத்!

அஜித் நடித்த ’துணிவு’ திரைப்படம் இன்று வெளியாகிருக்கும் நிலையில் இந்த படம் பெரும்பாலான விமர்சகர்களால் பாசிட்டிவ் விமர்சனத்தை பெற்று வரும் நிலையில் பொங்கல் வின்னர் என்பதை உறுதி செய்துள்ளது.
வங்கியில் கொள்ளையடிப்பதற்காக அஜித் சென்றிருக்கும் நிலையில் தனக்கு முன்னே இன்னொரு கூட்டம் கொள்ளையடிக்க வந்திருப்பதையும், தனக்கு பின்னர் இன்னொரு கூட்டம் அந்த வங்கியை கொள்ளையடிக்க திட்டமிடுவதையும் புரிந்து கொள்கிறார். இந்த மூன்று கொள்ளையர்களில் அந்த வங்கியை கொள்ளையடித்தது யார்? காவல் துறையின் நடவடிக்கை என்ன? வங்கி உரிமையாளரின் ரியாக்சன் என்ன? என்பதுதான் இந்த படத்தின் கதை.
அஜீத் கிட்டத்தட்ட இந்த படத்தில் ஒன் மேன் ஷோவாக அசத்தியுள்ளார். கடந்து சில படங்களில் சீரியசாக வசனம் பேசிய அஜித் இந்த படத்தில் நேர்மாறாக ஜாலியாக மைக்கல் ஜாக்சன் நடனத்துடன் கூடிய நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். காமெடி, நடனம், சீரியஸ் ஆக்சன் என ஒரு ஒட்டுமொத்த ரசிகர்களுக்கான விருந்தை அஜித் அளித்துள்ளார் என்று தான் கூற வேண்டும்.
அஜித் திரையில் தெரிந்தால் அவரை தவிர வேறு யாரையும் ரசிகர்கள் பார்க்க மாட்டார்கள். ஆனால் மஞ்சுவாரியர் தன் பக்கமும் ரசிகர்களை கவர்ந்திழுக்கும் அளவிற்கு தனது நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார். கமிஷனராக சமுத்திரகனி, பத்திரிகையாளராக மோகனசுந்தரம், வங்கியின் உரிமையாளராக ஜான் கொகைன், ஆகியோர்களும் தங்களுக்கு கொடுத்த பணியை சரியாக செய்துள்ளனர்.
இயக்குனர் எச் வினோத் இந்த படத்தில் ஒரு பெரிய பாடமே எடுத்துக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும். வங்கியில் இவ்வளவு முறைகேடுகள் நடக்கின்றதா? என்று ஆச்சரியப்படும் அளவுக்கு அவ்வளவு விஷயங்களை ஒரு இரண்டரை மணி நேர படத்தில் தெரிவித்துள்ளார். ஒரு வங்கியில் கணக்கு வைத்து விட்ட ஒரு அப்பாவி வாடிக்கையாளரை வங்கி நிர்வாகம் எந்தெந்த முறைகளில் மோசடி செய்கிறது? அவர்களுடைய பணத்தை எப்படி எல்லாம் முறைகேடாக பயன்படுத்துகிறது? என்பதை மிகவும் விலாவாரியாக எச் வினோத் தெரிவித்துள்ளார்.
அதேபோல் மியூச்சுவல் ஃபண்டில் செய்யும் முதலீடு திடீரென நஷ்டம் அடைவது ஏன்? பங்குச் சந்தையில் ஏற்படும் மோசடிகளுக்கு காரணம் என்ன? வங்கி வாடிக்கையாளர்களின் பணத்தை எப்படி எல்லாம் மோசடி செய்கிறது என அனைவருக்கும் ஒரு பாடமே எடுத்து உள்ளார் என்று தான் சொல்ல வேண்டும்.
மொத்தத்தில் எச் வினோத் இந்த படத்தின் ஆட்டநாயகனாக கருதப்படுகிறார். சமுத்திரக்கனியின் காவல்துறை அதிகாரி நடிப்பு, பத்திரிகையாளராக வரும் மோகன சுந்தரத்தின் நடிப்பு ஆகியவை சூப்பர். ஜிப்ரானின் இசை படத்திற்கு மிகப்பெரிய பலம். மொத்தத்தில் அஜித்தின் துணிவு ரசிகர்களுக்கான படம் மட்டும் இன்றி பொதுமக்களுக்கான ஒரு பாடமாகும்.