விமர்சனம்
ஆட்டநாயகன் விஜய் சதம் அடித்தாரா? சறுக்கினாரா? எப்படி இருக்கு வாரிசு திரைப்படம்!

தில் ராஜு தயாரிப்பில் இயக்குநர் வம்சி பைடிபைலி இயக்கத்தில் நடிகர் விஜய், ராஷ்மிகா மந்தனா நடிப்பில் இன்று வெளியான வாரிசு திரைப்படம் திரையரங்குகளில் ஹவுஸ்ஃபுல் காட்சிகளாக ஓடிக் கொண்டிருக்கின்றன.
பொங்கல் விடுமுறை வரை படம் வெளியாவதற்கு முன்னதாகவே டிக்கெட்டுகள் முன் பதிவு தொடங்கப்பட்டு ரசிகர்களை முண்டியடித்து ஒரு வாரத்திற்கு வாங்க வைத்து விட்டனர். படம் சுமாராக இருந்தாலும் வசூலுக்கு ஒன்றும் பாதிப்பு இல்லையே என்கிற நிலைமை தான் நிலவி வருகிறது.
பெரும் பணக்காரரான சரத்குமாருக்கும் அவரது மூன்றாவது மகனுக்கும் முட்டிக் கொள்ள வீட்டை விட்டு ஊர் சுற்ற கிளம்பி விடுகிறார் விஜய். பல வருடங்களுக்கு பிறகு அப்பா அம்மாவின் 60வது திருமணத்துக்காக மீண்டும் அம்மாவின் கோரிக்கையை ஏற்று வீட்டுக்கு வருகிறார் விஜய்.
அப்பாவுக்குத் தெரியாமலையே அண்ணன்களான ஸ்ரீகாந்த் மற்றும் ஷாம் செய்துள்ள தில்லாலங்கடி தெரிய வர அவர்கள் வீட்டை விட்டு வெளியேறுகின்றனர். சரத்குமாருக்கு கேன்சர் நோய் இருப்பதால் அவருக்கு பதிலாக அந்த நிறுவனத்தை தலைமை தாங்கும் பொறுப்பு இடைவேளையின் போது விஜய் கைகளுக்கு வருகிறது.
தொழில் எதிரியாக பிரகாஷ் ராஜ் பழைய வில்லத்தனத்தை காட்டுகிறார். பிரகாஷ் ராஜை விட பெரிய வில்லன்களாக இரு அண்ணன்களும் மாற கண் முன்னாடியே குடும்பம் உடைந்து போவதை பார்த்து வருத்தம் அடையும் அம்மாவுக்காக மீண்டும் அண்ணன்களை குடும்பத்தில் எப்படி இணைத்தார் விஜய் என்பது தான் வாரிசு படத்தின் கதை.
முதல் பாதியில் ஜாலியான விஜய்யாக காதலிப்பது, யோகி பாபுவுடன் காமெடி செய்வது போன்ற காட்சிகள் 2கே கிட்ஸ்களின் க்ரிஞ்ச் காமெடியாகவே நீள்கிறது. இரண்டாம் பாதியில் ரசிகர்கள் எதிர்பார்த்த ஆட்டநாயகனாக விஜய் மாறும் போது தான் படம் சூடு பிடிக்கிறது.
குடும்பம்னா பிரச்சனை வரத்தான் செய்யும் என்றும் நமக்கு இருப்பது ஒரே ஒரு குடும்பம் தான், இன்னும் 5 நிமிஷத்துல ஆட்சியே மாறப் போகுது உள்ளிட்ட வசனங்கள் ஆழம் பதிக்கின்றன.
ஆட்ட நாயகன் விஜய் சச்சின் டெண்டுல்கரை போல அவர் மட்டுமே சதம் அடிக்கிறார். ஆனால், தனது அணி வெற்றியடையவில்லை என்கிற நிலை தான் வாரிசு படத்துக்கு நேர்ந்துள்ளது. வாரிசு ரேட்டிங் – 2.75!