தமிழ்நாடு
சென்னையில் டெலிவரி பணியாளர்களுக்கு ஏர் கண்டிஷன் ஓய்வு மையங்கள்!

சென்னையில் செயல்படும் ஃபுட் டெலிவரி பணியாளர்கள் மற்றும் கேப் டிரைவர்கள் பல்வேறு சவால்களை எதிர்கொண்டு வருகின்றனர். கடும் வெயில், மழை, திருட்டு உள்ளிட்ட பிரச்சனைகளுக்கிடையே ஓய்வு எடுக்கும் இடமின்றி சாலையோரங்களில் காத்திருக்க வேண்டிய நிலைமை நீடித்துவருகிறது. இதனை மாற்ற சென்னை மாநகராட்சி புதிய திட்டத்தை செயல்படுத்த உள்ளது.
ஏர் கண்டிஷன் ஓய்வூதிய மையங்கள் – ஒரு புதிய தொடக்கம்
துபாய் நகரின் முன்மாதிரியை பின்பற்றி அண்ணா நகர், நுங்கம்பாக்கம், ராயப்பேட்டை, மயிலாப்பூர், டி.நகர் உள்ளிட்ட பகுதிகளில் ஏர் கண்டிஷன் ஓய்வு மையங்கள் உருவாக்கப்படவுள்ளது. இம்மையங்களில்,
✔️ கழிப்பறைகள்
✔️ மொபைல் சார்ஜிங் வசதி
✔️ பாதுகாப்பான காத்திருக்க இடங்கள்
வழங்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பெண்கள் பங்கேற்பு அதிகரிக்குமா?
தற்போது, கேப் டிரைவர்கள் மற்றும் டெலிவரி பணியாளர்களில் பெண்களின் பங்கு வெறும் 10% மட்டுமே. பாதுகாப்பான ஓய்வெடுக்க இடங்கள் கிடைத்தால், இந்த எண்ணிக்கை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பெரும் சவால் – இடத்தைக் கண்டுபிடிக்க முடியுமா?
சென்னை நகரின் போக்குவரத்து நெரிசலால், குறிப்பாக காதர் நவாஸ் கான் சாலை போன்ற பகுதிகளில், இதற்கான இடம் ஒதுக்குவது மிகப்பெரிய சவாலாக உள்ளது. இருப்பினும், நகராட்சியின் முயற்சி தொழிலாளர்களுக்கு பெரும் நிவாரணமாக அமையும்.








