இந்தியா
ஆப்கானிஸ்தான் நிலநடுக்கத்தில் 800 பேர் பலி – மனிதாபிமான உதவிக்கு இந்தியா தயாரென பிரதமர் மோடி அறிவிப்பு!

ஆப்கானிஸ்தானின் நங்கர் மாகாணம், ஜலாலாபாத் பகுதியில் நேற்று இரவு 11:47 மணியளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. பூமிக்கடியில் 8 கி.மீ ஆழத்தில் உருவான இந்த அதிர்வு, ரிக்டர் அளவில் 6.0 என பதிவாகியுள்ளது. இதற்கு 20 நிமிடங்களுக்குப் பிறகு அதே பகுதியில் 4.5 ரிக்டர் அளவிலான மற்றொரு நிலநடுக்கமும் ஏற்பட்டது.
தொடர்ச்சியான நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் இடிந்து விழுந்து பெரும் அழிவை ஏற்படுத்தியுள்ளது. அதிகாரிகள் வெளியிட்ட தகவலின்படி, இதுவரை 800 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 2,500-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
இந்த சூழ்நிலையில், இந்திய பிரதமர் நரேந்திர மோடி தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார். தனது எக்ஸ் பதிவில்,
“ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் ஏற்பட்ட உயிரிழப்புகள் மிகுந்த துயரத்தை ஏற்படுத்துகின்றன. இந்த கடினமான நேரத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுடன் எங்கள் எண்ணங்களும் பிரார்த்தனைகளும் உள்ளன. காயமடைந்தோர் விரைவில் குணமடைய வாழ்த்துகிறோம். மேலும், இந்தியா அனைத்து வகையான மனிதாபிமான உதவிகளையும் நிவாரணங்களையும் வழங்க தயாராக உள்ளது”
என்று குறிப்பிட்டுள்ளார்.













