தமிழ்நாடு
நடிகை மீராமிதுன் நீதிமன்றத்தில் ஆஜர்: சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவு!

நடிகை மீரா மிதுனை காவல்துறையினர் சற்று முன்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய நிலையில் அவரை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
நடிகையும் பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவருமான மீராமிதுன் பட்டியல் இனத்தவர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரல் ஆனது. இதனால் அதிர்ச்சி அடைந்த பட்டியலினத்தவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் மீராமிதுன் மீது 7 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்த நிலையில் மீராமிதுன் காவல் நிலையத்தில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால் மீரா மிதுன் தலைமறைவானதாக கூறப்பட்டதை அடுத்து அவரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த நிலையில் மீராமிதுன் செல்போன் சிக்னலை வைத்து அவர் கேரளாவில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் தங்கியிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இந்த தகவலின் அடிப்படையில் கேரளா சென்ற தமிழக போலீசார் அவரை கைது செய்து சென்னைக்கு அழைத்து வந்தனர். சென்னையில் ரகசிய இடத்தில் மீரா மிதுன் உடன் விசாரணை நடத்தப்படுவதாகவும் இந்த விசாரணைக்கு மீராமிதுன் ஒத்துழைப்பு தரவில்லை என்றும் கூறப்பட்டது. இந்த நிலையில் மீராமிதுடன் இருந்த ஆண் நண்பர் கைது செய்யப்பட்டதாக தகவல் வெளியானது.
இந்த நிலையில் சற்று முன்னர் நடிகை மீரா மிதுன் குற்றவியல் 17வது அமர்வு நீதிபதி கிருஷ்ணன் அவர்கள் முன்னர் ஆஜர்படுத்தப்பட்டார். இதனை அடுத்து அவரை 27ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதனை அடுத்து அவர் சிறைக்கு அழைத்துச் செல்லப்படுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


















