இந்தியா
போலீஸ் வேலையில் சேர்ந்த ஒரே ஆண்டில் கைது.. மல்யுத்த வீராங்கனை செய்த அதிர்ச்சி குற்றம்..!

மல்யுத்த வீராங்கனை ஒருவருக்கு விளையாட்டு கோட்டா மூலம் காவல்துறையில் வேலை கிடைத்த நிலையில் வேலை கிடைத்த ஒரே ஆண்டில் அவர் கடத்தல் மற்றும் ஆயுதங்கள் வைத்திருந்ததாக கைது செய்யப்பட்டதோடு சஸ்பெண்ட் செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த நைனா கன்வால் என்ற பெண் சர்வதேச மல்யுத்த வீராங்கனை என்பதும் அவரது சகோதரர் மற்றும் தந்தையும் மல்யுத்த ஆர்வலர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
ஹரியானா மாநிலத்தில் மல்யுத்த விளையாட்டில் பல விருதுகளை வென்ற அவர் கடந்த 2022 ஆம் ஆண்டு ராஜஸ்தான் காவல்துறையில் சப் இன்ஸ்பெக்டர் பணியை பெற்றார். விளையாட்டு ஒதுக்கீட்டில் அவருக்கு வேலை கிடைத்த நிலையில் அவர் நியமனம் செய்யப்பட்ட ஒரே வருடத்தில் கைது செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ராஜஸ்தான் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ஆக பணிபுரிந்த நைனா, நண்பர் சுமித் நந்தல் என்பவருடன் இணைந்து ஆயுதங்களை கடத்தல் உள்ளிட்ட குற்றங்களை செய்ததாக தெரிகிறது. இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் அவரது குடியிருப்பில் சோதனை செய்தபோது இரண்டு சட்ட விரோதமாக வைத்திருந்த துப்பாக்கிகளை அவர் ஜன்னல் வழியாக வீசியதை போலீசார் கண்டுபிடித்தனர். இந்த அந்த துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டதோடு அவரை சஸ்பெண்ட் செய்து காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.
மேலும் அவரை கைது செய்த போலீசார் அவரிடம் தீவிரமாக விசாரணை செய்து வருவதாகவும் தீவிரவாத குழுக்களுடன் அவருக்கு தொடர்பு இருக்கிறதா என்பது குறித்து விசாரணையில் தெரியவரும் என்றும் கூறப்படுகிறது. காவல் துறையில் பணிபுரியும் ஒருவரே கடத்தல் மற்றும் ஆயுதங்கள் வைத்திருந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஆனால் இது குறித்து நைனா கன்வால் தந்தை கூறும் போது தனது மகள் முற்றிலும் அப்பாவி என்றும் அவரிடம் சட்டவிரோத ஆயுதங்கள் இருப்பதாக கூறப்படுவது தவறு என்றும் கூறினர். இவர் ஒரு இன்ஸ்டாகிராம் மாடல் என்பதும் அவருக்கு இன்ஸ்டாகிராமில் 2 லட்சத்துக்கும் அதிகமான ஃபாலோயர்கள் உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. அதுமட்டும் என்று அவர் தனது இன்ஸ்டாகிராமில் ஜிம்மில் உடற்பயிற்சி செய்யும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவு செய்து வருவார் என்பதும் கிளாமராக இருக்கும் இந்த புகைப்படங்கள் வைரலாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.