இந்தியா
ஆதார் – பான் கார்டு இணைக்க கால அவகாசம் நீட்டிப்பு: மத்திய அரசு!

ஆதார் கார்டு மற்றும் பான் கார்டு ஆகிய இரண்டையும் இணைப்பதற்கான கால அவகாசம் மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது என மத்திய அரசு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதனால், இதுவரையிலும் பான் – ஆதாரை இணைக்காத பொதுமக்கள், இந்த கால அவகாசத்தைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
தொடக்கத்தில் பான் – ஆதார் அட்டை இணைக்க எந்தவித கட்டணமும் வசூலிக்கப்படவில்லை. ஆனால், பிறகு 500 ரூபாய் அபராதம் விதித்து கால அவகாசத்தை நீட்டித்தது. அதன் பிறகு, 1,000 ரூபாய் அபராதம் விதித்து கால அவகாசத்தை நீட்டித்தது. இப்போதும் பான் ஆதார் அட்டையை 1,000 ரூபாய் அபராதம் செலுத்தி தான் இணைக்க வேண்டும்.
கால அவகாசம் நீட்டிப்பு
கடந்த 2020 ஆம் ஆண்டில் பான் கார்டை, ஆதார் கார்டுடன் அனைவரும் இணைக்க வேண்டும் என மத்திய அரசு உத்தரவு பிறப்பித்து இருந்தது. அதன்படி கடந்த ஆண்டு மார்ச் 31 ஆம் தேதி அதற்கு கடைசி நாளாக இருந்தது. ஆனால், நாட்டில் அப்போது நிலவிய கொரோனா சூழல் காரணமாக இந்த அவகாசம் நடப்பு ஆண்டு மார்ச் மாதம் 31 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது.
கால அவகாசத்திற்கு இன்னனும் 3 நாட்களே உள்ள நிலையில், கூடுதல் அவகாசம் வழங்கப்படுமா என்ற கேள்வி எழுந்தது. இந்நிலையில் பான் கார்டு மற்றும் ஆதார் கார்டு ஆகிய இரண்டையும் இணைப்பதற்கான கால அவகாசம், மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. அதாவது வருகின்ற ஜூன் மாதம் 30 ஆம் தேதி வரை நீட்டித்து மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.