தமிழ்நாடு
மீண்டும் எய்ம்ஸ் ஒத்த செங்கல்: அமைச்சர் உதயநிதி அதிரடி பிரச்சாரம்!

ஈரோடு கிழக்கு தொகுதியின் இடைத்தேர்தல் வரும் 27-ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் திமுக கூட்டணியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஸ் இளங்கோவனை ஆதரித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

#image_title
கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட உதயநிதி ஒரு செங்கலை எடுத்து மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை என கூறி அதிரடி பிரச்சாரம் செய்தார். அதே பாணியில் நேற்றும் எய்ம்ஸ் என்று எழுதப்பட்ட ஒத்த செங்கலை காண்பித்து பிரச்சாரம் செய்தார். அப்போது பேசிய அவர், இது தான் அதிமுக-பாஜக கூட்டணி மதுரைக்கு கட்டிக் கொடுத்த எய்ம்ஸ் மருத்துவமனை. ஒரு செங்கல் தான் உள்ளது. மோடி அறிவித்த இந்த எய்ம்ஸ் மருத்துவமனைக்கு 300 கோடி ரூபாய் செலவு செய்து, இந்த ஒரு செங்கல் தான் உள்ளது என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், நான் சட்டமன்றத்தில் அதிமுகவினரிடம் கூறினேன் கமலாலயம் சென்று விடாதீர்கள் என்று. எடப்பாடி பழனிசாமி அதற்கு வாய் திறக்கவே இல்லை. ஓபிஎஸ் மட்டுமே நாங்கள் கமலாலயம் செல்ல மாட்டோம் என்றார். ஆனால் தற்போது இருவரும் போட்டி போட்டுக் கொண்டு கமலாலயம் வாசலில் நிற்கிறார்கள். அண்ணாவின் பெயரை கட்சியில் வைத்துக்கொண்டு அவரது கொள்கைக்கு எதிராக செயல்படுகிறார்கள்.
ஜெயலலிதாவுக்கோ, உங்களை முதலமைச்சர் ஆக்கிய சசிகலாவிற்கோ, ஓபிஎஸுக்கு, மக்களுக்கோ யாருக்குமே நீங்கள் உண்மையாக இல்லை. உங்கள் எஜமானர்கள் மோடி, அமித்ஷாவுக்கு மட்டுமே உண்மையாக இருக்கிறீர்கள் என்றார்.









