தமிழ்நாடு
அந்தமானில் தோன்றிய காற்றழுத்த தாழ்வின் தற்போதைய நிலை என்ன?

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் அந்தமான் கடல் பகுதியில் தோன்றிய காற்றழுத்த தாழ்வு பகுதி வலுபெற்று வருவதாகவும் இதன் காரணமாக வட தமிழ்நாட்டில் கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சமீபத்தில் வங்கக் கடலில் தோன்றிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரைக்கால் மற்றும் ஸ்ரீஹரிகோட்டா இடையே கரையை கடந்தது என்பதும் இதனால் வட தமிழ்நாட்டில் தீவிர கனமழை பெய்தது என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் தற்போது மீண்டும் ஒரு காற்றழுத்த தாழ்வு நிலை அந்தமான் பகுதி அருகே தோன்றியுள்ளது.
இந்த காற்றழுத்த தாழ்வு தற்போது அந்தமான் கடல் பகுதியில் நிலைகொண்டு இருப்பதாகவும், இந்த காற்றழுத்த தாழ்வு மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறி, அதன்பின் காற்றழுத்த மண்டலமாக மாற வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் திடீரென அரபிக்கடலில் இன்னொரு காற்றழுத்த தாழ்வு பகுதி ஒன்று உருவாகி வருவதாகவும் இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக இந்தியப் பெருங்கடலின் காற்றின் திசை மாறும் என்றும் இதன் காரணமாக அந்தமான் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலிமை பெறாது என்றும் கணிக்கப்படுகிறது.
இந்த காற்றழுத்த தாழ்வு மையம் ஆந்திரா கடற்கரையில் வரும் 19ஆம் தேதி கரையை கடக்க வாய்ப்பு இருப்பதாகவும் இதன் காரணமாக தமிழ்நாடு மற்றும் ஆந்திராவில் அடுத்த 2 நாட்களுக்கு கன மழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
குறிப்பாக நவம்பர் 18 மற்றும் 19ஆம் தேதிகளில் வடதமிழ்நாடு மற்றும் சென்னை, கிருஷ்ணகிரி, தர்மபுரி திருப்பத்தூர், திருவண்ணாமலை தஞ்சை, திருவாரூர், நாகை ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


















