தமிழ்நாடு
சென்னையில் காணாமல் போன வெயில்.. வெளுத்து வாங்கும் மழை.. தற்போது நிலவரம் என்ன?

சென்னை: சென்னையில் பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. கடும் வெயிலுக்கு இடையில் திடீரென சென்னையில் மழை பெய்து கொண்டு இருக்கிறது.
தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வதைத்துக்கொண்டு இருக்கிறது. பல மாவட்டங்களில் 95 டிகிரி பாரன்ஹீட் வரை வெயில் அடித்துக்கொண்டு இருந்தது. முக்கியமாக சென்னையில் 96 டிகிரி பாரன்ஹீட் வரை வெயில் அடித்துக்கொண்டு இருந்தது.
இந்த நிலையில்தான் தற்போது திடீரென சென்னையில் கனமழை பெய்கிறது. அதிகாலையில் இருந்து சென்னையில் மழை பெய்து கொண்டு இருக்கிறது . இந்த நிலையில் தமிழ்நாட்டில் அடுத்த 5 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டு உள்ளது . முக்கியமாக சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வரும் 20ஆம் தேதி வரை இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதையடுத்து சென்னையில் அண்ணாசாலை உள்ளிட்ட சில இடங்களில் இன்று அதிகாலை முதல் பலத்த மழை பெய்து வருகிறது. சென்னை வேளச்சேரியில் காற்றுடன் கூடிய ஆலங்கட்டி மழை பெய்து வருகிறது . கிண்டி, ஈக்காட்டுத்தாங்கல், ஆலந்தூர், அசோக் நகர், தி.நகர், தாம்பரம், கோயம்பேடு, வடபழனி, சைதாப்பேட்டை, சென்னை விமான நிலையம், மயிலாப்பூர் உள்ளிட்ட இடங்களில் மழை பெய்து வருகிறது .
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இந்த மழை பெய்வதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.