தமிழ்நாடு
ஒருபுறம் ஈபிஎஸ் – ஓபிஎஸ் உடன் சந்திப்பு; மறுபக்கம் சசிகலாவுடன் கூட்டணி பேச்சு!- பாஜக பிளான்

அதிமுகவில் சசிகலாவை மீண்டும் இணைப்பதில் பாஜக தீவிரம் காட்டி வருவதாக தொடர்ந்து நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல் வந்து கொண்டிருக்கிறது. இது தமிழக அரசியல் தளத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதிமுகவின் முன்னாள் பொதுச் செயலாளர் சசிகலா, கட்சியை மீண்டும் கைப்பற்றுவேன் என்று வெளிப்படையாக தொடர்ந்து கருத்து கூறி வருகிறார்.
அதிமுகவில் இருக்கும் அவரது ஆதரவாளர்களும் இதனால் குஷியில் உள்ளார்கள். மேலும் கடந்த சில வாரங்களாக திமுக அரசு, அதிமுக அமைச்சர்கள் மீது தொடர்ந்து ரெய்டு நடத்தி வழக்குகள் பதிவு செய்து நடவடிக்கை எடுத்து வருகிறது.

இதனால் கலக்கத்தில் உள்ள அதிமுக தலைமை, டெல்லி சென்று மோடி மற்றும் அமித்ஷாவை நேரில் பார்த்து உதவி கோரியுள்ளது.
இந்நிலையில் சசிகலா பற்றிய கேள்விக்கு அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், ‘ஒரு தனிப்பட்ட குடும்பமோ, ஒரு தனி நபரோ கட்சியில் ஆதிக்கம் செலுத்தக் கூடாது என்பது தான் எங்களின் நிலைப்பாடு. கழகத்தின் மொத்த தொண்டர்களும் எங்கள் பின்னால் உள்ளார்கள். இந்த நிலை தொடரும். என்ன முயற்சி நடந்தாலும் அதிமுகவை இனி யாராலும் கைப்பற்ற முடியாது’ என்று கூறியுள்ளார்.
இந்த அரசியல் பரபர குறித்து பாஜகவின் மாநிலத் தலைவர் அண்ணாமலை, ‘சசிகலாவுடன் நாங்கள் ரகசியமாக பேச்சுவார்த்தை நடத்துவதாக எதன் அடிப்படையில் கூறப்படுகிறது என்று எனக்குத் தெரியவில்லை. அதிமுகவினால் சட்டப் பூர்வமாக தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்கள் ஈபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் மட்டும் தான். அவர்களுடன் மட்டும் தான் நாங்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம்’ என்று கட் அண்டு ரைட்டாக பதில் கூறியுள்ளார்.







