தமிழ்நாடு
அந்த செருப்பு அவர்களுக்கு சேராது: ‘ஜல்லிக்கட்டு நாயகன்’ குறித்த கேள்விக்கு கமல் பதில்!

பிரதமர் மோடி தான் உண்மையான ஜல்லிக்கட்டு நாயகன் என நேற்று துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் அவர்கள் தாராபுரம் பொதுக்கூட்டத்தில் பேசிய நிலையில் இது குறித்த கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த கமல் ஹாசன் ’அந்த செருப்பு அவர்களுக்கு சேராது’ என்று கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
நேற்று தாராபுரத்தில் அதிமுக-பாஜக கூட்டணியின் பிரம்மாண்டமான பொதுக்கூட்டம் நடந்தது. இதில் பிரதமர் மோடி, முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த மேடையில் துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் பேசியபோது ’என்னை எல்லோரும் ஜல்லிக்கட்டு நாயகன் என்று கூறுகின்றனர். ஆனால் உண்மையான ஜல்லிக்கட்டு நாயகன் பிரதமர் மோடிதான் என்றும் அவர்தான் ஜல்லிக்கட்டை தமிழகத்தில் நடத்த அனுமதி வழங்கிய உதவி செய்தார் என்றும் குறிப்பிட்டார்.
துணை முதல்வரின் இந்த பேச்சு பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் நேற்று மதுரையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் அவர்கள் தேர்தல் பிரச்சாரம் செய்தபோது செய்தியாளர்களை சந்தித்தபோது ’உண்மையான ஜல்லிக்கட்டு நாயகன் மோடிதான் என்று துணை முதல்வர் கூறியது குறித்து கேட்டனர்.
இதற்கு பதில் அளித்த கமல்ஹாசன் ’அந்த செருப்பு அவர்களுக்கு சேராது’ என்று கூறினார். பொதுவாக கமல்ஹாசன் பேசுவது பாதிக்குமேல் புரியாது என்ற நிலையில் ஜல்லிக்கட்டு நாயகன் கேள்விக்கும் செருப்பு சேராது என்பதற்கும் என்ன சம்பந்தம் என்பது புரியாமல் பலர் திருதிருவென விழித்தனர்,

















