இந்தியா
நாளை முதல் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பிக்கும் அன்னா ஹசாரே

சமூக செயற்பாட்டாளர் அன்னா ஹசாரே, நாளை முதல் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பிக்க உள்ளதாக அறிவித்துள்ளார். மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள தனது சொந்த ஊரான அகமதுநகர் பகுதியில் இந்த உண்ணாவிரதப் போராட்டம் தொடங்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார். தனது ஆதரவாளர்களையும், தாங்கள் இருக்கும் இடங்களில் இருந்தபடியே போராட்டங்களைத் தொடங்குமாறு அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
‘கடந்த நான்கு ஆண்டுகளாக விவசாயிகளின் முக்கிய கோரிக்கைகளை நிறைவேற்றுமாறு வலியுறுத்திப் பல்வேறு கட்ட போராட்டங்களைத் தொடர்ச்சியாக செய்து வந்துள்ளேன். அப்படி இருந்தும் விவசாயிகள் விவகாரத்தில் அரசு, சரியான முடிவை எடுக்கவில்லை என்று தான் நினைக்கிறேன். விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு இந்த அரசாங்கம் செவி மடுக்க மறுக்கிறது.
நாங்கள் மத்திய அரசுக்கு முன்னர் எங்களின் கோரிக்கைகளை தொடர்ச்சியாக வைத்து வந்தோம். கடந்த மூன்று மாதங்களில் மட்டும் பிரதமர் நரேந்திர மோடிக்கும், மத்திய வேளாண் துறை அமைச்சருக்கும் 5 முறை கடிதம் எழுதியுள்ளேன். அவர்கள் தொடர்ச்சியாக எங்களின் கோரிக்கைகள் பற்றி விவாதித்துக் கொண்டிருக்கிறார்களே தவிர, ஒரு ஸ்திரமான முடிவை எடுக்கத் தவறிவிட்டனர். எனவே கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை முதல் காலவரையற்ற உண்ணாவிரதத்தில் இருக்கப் போகிறேன்’ என்று தன் போராட்டம் குறித்து அறிவித்துள்ளார் அன்னா ஹசாரே.








