தமிழ்நாடு
‘ஆமா… அவரு பெரிய கிங்மேக்கரு..!’- குருமூர்த்தியை இப்படி பேசிட்டாரே ஜெயக்குமார்

நேற்று நடந்த ‘துக்ளக்’ இதழ் ஆண்டு விழாவில், தமிழகத்தின் நடப்பு அரசியல் குறித்துப் பேசினார் ஆடிட்டரும் இதழின் ஆசிரியருமான குருமூர்த்தி. ரஜினியின் நெருங்கிய நண்பராக இருந்த குருமூர்த்தி, அவரை அரசியல் கட்சித் தொடங்க வைக்க வேண்டும் என்று படாத பாடு பட்டார். ஆனால், கடைசியில் ‘எனக்கு உடல்நிலை சரியில்லை. எனவே அரசியல் கட்சித் தொடங்கப் போவதில்லை’ என்று திட்டவட்டமாக அறிவித்து விட்டார் ரஜினி. இது குருமூர்த்தி எதிர்பார்த்திராத ட்விஸ்டாக மாறிவிட்டது. தற்போது தமிழகத்தில் திமுகவுக்கு மாற்று அணியை உருவாக்க குருமூர்த்தி செயல்பட்டு வருகிறார்.
அந்த வகையில் திமுகவை வீழ்த்தும் வியூகம் குறித்து ‘துக்ளக்’ விழாவில் பேசிய குருமூர்த்தி, ‘‘வீடு பற்றியெரியும் போது, கங்கை ஜலம் தான் வேண்டும் என்று காத்திருக்க முடியாது. சாக்கடை ஜலம் கிடைத்தாலும் அதைப் பயன்படுத்தி நெருப்பை அணைக்க வேண்டும். அதைப் போல அதிமுக, சசிகலாவை இணைத்துக் கொண்டால் தான் வெற்றி பெற முடியும் என்கிற நிலையில் இருந்தால், அதை செய்யவும் தயங்கக் கூடாது’ என்று பேசினார்.
‘குருமூர்த்தியைப் பொறுத்த அளவில், அவருக்கு மனதளவில் சாணக்கியர் என்ற நினைப்பு. கிங் மேக்கர் என்று நினைக்கிறார். வேறு எந்த மாநிலங்களில் வேண்டுமானால் அவர் இப்படி எதாவது செய்து பார்க்கலாம். ஆனால் தமிழகத்தில் அவரது கருத்து எடுபடாது. அவர் தான் கிங் மேக்கர் மாதிரியும், பிதாமகன் போன்றும் ஒரு பெரிய பிரம்மையை ஏற்படுத்துகிறார்கள்.
கங்கை நதி, சாக்கடை என்றெல்லாம் பேசுகிறார். ஒரு சாக்கடைக்குத்தான் சாக்கடையைப் பற்றி பேசத் தோன்றும். அதனால் அவர் கருத்தையெல்லாம் பெரிதாக எடுத்துக் கொள்ள முடியாது. குருமூர்த்தி, தினகரனிடம் கையூட்டு வாங்கிக் கொண்டு, பெரிதளவில் பணத்தைப் பெற்றுக் கொண்டு இப்படியான கருத்தை சொல்கிறாரா என்று விளக்கம் கொடுக்க வேண்டும்.
வீடு பற்றி எரிகிறது. அதை அணைக்க வேண்டும் என்றெல்லாம் பேசி வருகிறார். இங்கு வீடும் பற்றி எரியவில்லை. அதை அணைக்க வேண்டிய தேவையும் இல்லை. அவர் ஒரு கிங் மேக்கரும் இல்லை’ என்று பேட்டியளித்து குருமூர்த்திக்கு பதிலடி கொடுத்துள்ளார்.







