இந்தியா
பிளாஸ்டிக் பாட்டில் கொடுத்தால் இலவச துணிப்பை! சென்னையில் புதிய முயற்சி!

நாள்தோறும் பொழுதைப் போக்க கடற்கரைக்குச் செல்லும்போது நாம் பயன்படுத்திய பிளாஸ்டிக் பாட்டிலைக் கொடுத்தால் அதற்குப் பதிலாக ஒரு துணிப்பை கிடைத்தால் எப்படி இருக்கும்?
சென்னையின் புகழ்பெற்ற மெரினா கடற்கரையில் பிளாஸ்டிக் மாசுபாட்டைக் குறைக்க இப்படியொரு புதுமையான முயற்சி கவனம் ஈர்த்துள்ளது.
இதற்காக நவீன மறுசுழற்சி இயந்திரங்கள் (Smart Recycling Machines) அறிமுகப்படுத்தப் பட்டுள்ளன.
இந்த இயந்திரத்தில் பயன்படுத்திய பிளாஸ்டிக் பாட்டில்களைப் போட்டால், அதற்குப் பதிலாக மீண்டும் பயன்படுத்தக் கூடிய துணிப்பைகள் வழங்கப்படுகின்றன!
இதில் இன்னொரு சிறப்பான விஷயமும் இருக்கிறது!
பிளாஸ்டிக் கழிவுகளை மறுசுழற்சி செய்வதை ஊக்குவிப்பதுடன், ஒருமுறை மட்டுமே பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பைகளின் பயன்பாட்டையும் குறைப்பதே இதன் முக்கிய நோக்கம்.
தமிழக அரசின் மீண்டும் மஞ்சப்பை’ விழிப்புணர்வு இயக்கத்திற்கும் இந்த முயற்சி வலுசேர்க்கிறது.
பிளாஸ்டிக் பைகளுக்குப் பதிலாக பாரம்பரியமான மஞ்சப்பை மற்றும் துணிப்பைகளைப் பயன்படுத்த மக்களை ஊக்குவிப்பதே இந்த இயக்கத்தின் நோக்கம்.
சுற்றுச்சூழலைப் பாதுகாக்க மக்களை எச்சரிப்பதுடன் நிறுத்திக்கொள்ளாமல், நல்ல செயல்களைச் செய்பவர்களுக்குப் பரிசு வழங்கி ஊக்குவிக்கும் புதிய அணுகுமுறை இது!
இத்தகைய முயற்சிகள் பிளாஸ்டிக் மாசுபாட்டைக் குறைப்பதில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்த முடியும்.
