இந்தியா
இஸ்லாமியர்களை கடுமையாக தாக்கும் பசு காவலர்கள்: மோடியின் புதிய இந்தியா இதுதானா?

நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பாஜக தனித்து தனிபெரும்பான்மை பெற்று தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்சி அமைக்க உள்ளது. மோடி இரண்டாவது முறையாக பிரதமராக பதவியேற்க உள்ளார். அதற்குள் மத்திய பிரதேசம் மாநிலத்தில் இஸ்லாமியர்கள் பசுப் பாதுகாவலர்களால் கடுமையாக தாக்கப்பட்டுள்ளனர்.
ஒரு பெண் உட்பட மூன்று இஸ்லாமியர்கள் மாட்டிறைச்சி எடுத்து செல்வதாக செய்திகள் பரவியதை தொடர்ந்து அவர்களை பாசுப் பாதுகாவலர்கள் பிடித்து ஒருவர் பின் ஒருவராக மரத்தில் கட்டிவைத்து கம்புகளால் கடுமையாக தாக்கியுள்ளனர். இதனை பொதுமக்கள் சுற்றி நின்று வேடிக்கை பார்த்தனர்.
மேலும் அந்த இஸ்லாமியர்களை ஜெய் ஸ்ரீராம் என்று சொல்லும்படி பசுப் பாதுகாவலர்கள் வற்புறுத்தி தாக்கியுள்ளனர். அவர்களுடன் வந்த பெண்ணை செருப்புகளால் கடுமையாக தாக்கியுள்ளனர். இந்த சம்பவம் வீடியோவாக வெளியாகி வைரலாக பரவி வருகிறது. இதனையடுத்து இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த காவல்துறை ஒருவரை கைது செய்துள்ளனர். மற்றவர்களை தேடி வருகின்றனர்.
இந்நிலையில் இது தொடர்பாக டுவிட்டரில் பதிவிட்டுள்ள அசாதுதின் ஓவைசி, மோடி வாக்காளர்களால் உருவாக்கப்பட்ட பசுப் பாதுகாவலர்கள் இஸ்லாமியர்களை இப்படித்தான் நடத்துகின்றனர். மோடி சொன்ன ஒருங்கிணைந்த, மதச்சார்பற்ற புதிய இந்தியாவுக்கு வரவேற்கிறேன் என கூறியுள்ளார்.



















