இந்தியா
பி.எஃப் வட்டி குறைக்கப்பட இருக்கிறதா? வரப்போகும் புதிய அறிவிப்பு என்ன?

ஒன்றிய அரசு இபிஎப் திட்டத்திவ் சேந்துள்ள பளனர்களுக்கு 2024-25 ம் நிதியாண்டிலிருந்து 8.25சதவீதம் வட்டி வழங்கி வருகிறது. பிரதான் மந்திரி விக்சித் பாரத் ரோஜ்கர் யோஜனா போன்ற திட்டங்கள் வழியாக பிஎப் திட்டத்தில் இணைபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் அதிக உறுப்பினர்களுக்கு வட்டி வழங்க வேண்டிய கட்டாயத்தில் அரசு இருக்கிறது.
எனவே அரசு தனது நிதி இருப்பினை பாதுகாக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக வட்டியை 8.20 முதல் 8.0 வரை குறைக்க தொழிலாளர் வருங்கால வைப்புநிதி ஆணையம் ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இருப்பினும் தமிழ்நாடு, மேற்குவங்கம், கேரளா, அசாம் மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் விரைவில் தேர்தல் நடைபெற உள்ளதால் ஊழியர்களின் அதிருப்தியை சம்பாதிக்க வேண்டாமே என்பதால் வட்டி குறைப்பு தவிர்க்கப்படவும் வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. இம்மாத இறுதியில் நடைபெற உள்ள நிதி மற்றும் முதலீட்டுக் குழுவின் கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவு மற்றும் பரிந்துரைகளைக் கொண்டே இறுதி முடிவு எடுக்கப்படும் என்று தெரிகிறது.
மேலும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பிஎப் பங்களிப்பிற்கான உச்சவரம்பு ரூ.15000 லிருந்து ரூ.20000 ஆக உயர்த்தக்கூடிய அறிவிப்பும் வெளியாகலாம் என எதிர்பார்ப்பு உண்டாகியிருக்கிறது. பணவீக்கம் மற்றும் சம்பள உயர்வைக் கருத்தில் கொண்டு இந்த வரம்பை உயர்த்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டால் இந்த நடவடிக்கை எடுக்கப்படலாம் என்று தெரிகிறது.

