தமிழ்நாடு
தமிழகத்தில் பாஜக போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலும் பின்னடைவு!

நாடு முழுவதும் மக்களவை தேர்தல் முடிவுகளின் முன்னிலை நிலவரம் வெளியாகி வருகிறது. கடந்த சில நாட்களாக இந்தியா முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று நடைபெற்று வருகிறது.
இதில் நாடு முழுவதும் பாஜகவுக்கு ஆதரவான அலை வீசி வருகிறது. மத்தியில் பாஜக தனிப்பெரும்பான்மையை தாண்டி முன்னிலை வகித்து வருகிறது. ஆனால் தமிழகத்தில் அதன் நிலைமை தலைகீழாக உள்ளது. தமிழகத்தில் அதிமுக உடன் கூட்டணி வைத்து மக்களவை தேர்தலை சந்தித்த பாஜக 5 இடங்களில் போட்டியிட்டது.
கோயமுத்தூரில் சி.பி.ராதாகிருஷ்ணன், சிவகங்கையில் பாஜக் தேசிய செயலாளர் எச்.ராஜா, இராமநாதபுரத்தில் நயினார் நாகேந்திரன், தூத்துக்குடியில் பாஜக தமிழக தலைவர் தமிழிசை, கன்னியாகுமரியில் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் என ஐந்து பேர் பாஜக சார்பில் தமிழகத்தில் போட்டியிட்டனர்.
இவர்கள் ஐந்து பேரும் தற்போதைய நிலவரப்படி பின்னடைவை சந்தித்து வருகின்றனர். தமிழகத்தில் பாஜக காலூன்ற முடியாது என தொடர்ந்து எதிர் கட்சிகள் கூறிவரும் நிலையில் அதனை பிரதிபலிக்கும் விதமாகவே இந்த முன்னிலை நிலவருமும் இருக்கின்றன. நாடு முழுவதும் பாஜகவுக்கு ஆதரவு அலை வீசினாலும் தமிழகத்தில் பாஜகவுக்கு இறங்குமுகமாகவே உள்ளது.




















