செய்திகள்
சிவசேனையைப் போல கூறு போடப்படுகிறதா அதிமுக? வழி தவறிய ஆட்டுக் குட்டியாக எடப்பாடி…!

எம்ஜிஆர், ஜெயலலிதா போன்ற மிகப்பெரும் தலைவர்களால் கட்டமைக்கப்பட்ட அதிமுக என்ற கட்சி அவர்களின் மறைவுக்குப் பின்னர் ஏற்கனவே 4 கூறுகளாக உள்ள நிலையில் இப்போது செங்கோட்டையனை மையமாக வைத்து இன்னொரு பிரிவினையை சந்திக்கும் போல் தெரிகிறது. புதியதாக சில நாள்களுக்கு முன் முளை விட்ட தவெக என்கிற இதுவரை ஒரு தேர்தலில் கூட நின்று தனது செல்வாக்கை நிரூபிக்காத கட்சி தன்னோடு கூட்டணி சேர்ந்தால் ஆட்சி அதிகாரத்தில் பங்கு தரப்படும் என்று அதிமுகவை சீண்டிப் பார்க்கிறது.
கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு சூடு பிடிக்க ஆரம்பித்திருப்பது, தனது சம்பந்தி ராமலிங்கத்தின் 750 கோடி ரூபாய் வரி ஏய்ப்பு மோசடி செங்கோட்டையனின் தனி ஆவர்த்தனம் ஆகியவை எடப்பாடியாரை முள் மேல் நிற்பது போல வைத்திருக்கின்றன.
2026 தேர்தலில் வென்று ஆட்சியைப் பிடிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ள அதிமுக எடப்பாடி என்ற வழிதவறிய ஆட்டுக் குட்டியால் சிக்கிச் சீரழிந்து சின்னாபின்னமாகி வருவதாகவே அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர். பலமான கூட்டணி யாருடன் அமைப்பது என்ற திரிசங்கு சொர்க்கத்தில் எடப்பாடியார் திணறிக் கொண்டிருக்கிறார்.
ஓபிஎஸ்ஸோ எடப்பாடியை கட்சி தலைவர் பதவியிலிருந்து விலகச் சொல்கிறார். அமித்ஷாவோ ஓபிஎஸ் மற்றும் தினகரனுடன் கூட்டணி வைக்கச் சொல்கிறார். சசிகலாவை பொறுத்தவரை உங்கள் இஷ்டம் போல் செய்யுங்கள் என்று கூறிவிட்டார். சசிகலாவோ தனது தலைமையில் 2026ல் ஒருங்கிணைந்த அதிமுக ஆட்சி அமைய வேண்டும் என்று ஆசைப்பட்டுக் கொண்டிருக்கிறார். இதுவரை அதிமுகவை படுகேவலமாக விமர்சித்து வந்த அண்ணாமலை அமித்ஷாவை சந்தித்து திரும்பியதிலிருந்து அடக்கி வாசிக்க ஆரம்பித்திருக்கிறார். அண்ணாமயையை பாஜக தலைவர் பொறுப்பிலிருந்து நீக்கினால் மட்டுமே அதிமுக பாஜக வோடு கூட்டணி வைக்கும் என்று எடப்பாடி சொல்கிறார். அதிமுகவோடு கூட்டணி வைத்தால் தனது கட்சித் தலைவர் பதவியை ராஜினாமா செய்வேன் என்று அண்ணாமலை கூறுகிறார். பாஜகவோடு கூட்டணி வைத்தால் கட்சியிலிருந்து விலகுவேன் என்று ஜெயக்குமாரும் கூட்டணியிலிருந்து விலகுவோம் என்று இப்தார் விருந்தில் பெற்ற நம்பிக்கையை இழந்ததாக கருதும் இஸ்லாமிய கட்சிகள் பொருமத் தொடங்கி விட்டன.
செங்கோட்டையனை முன்னிறுத்தி ஓபிஎஸ், தினகரன், சசிகலா ஆகியோரை ஒருங்கிணைத்து கூட்டணி வைத்து தேர்தலில் வென்ற பின் சிவசேனாவிடம் நடத்திய நாடகத்தை அதிமுகவிடம் நடத்த பாஜக திட்டமிட்டிருப்பதாக அரசியல் கணிப்பாளர்கள் தெரிவிக்கின்றனர்.
ஆக தமிழகத்தில் முதலிடம் கிடைக்க வில்லையென்றாலும் இரண்டாவது இடத்திற்கு ஏகப்பட்ட போட்டி தென்படுவதால் இனிவரும் நாள்களில் தமிழக அரசியல் களம் மிகுந்த அனலாய் தகிக்க உள்ளது என்பது வெட்ட வெளிச்சமாக தெரிகிறது.















