கிரிக்கெட்
2nd ODI: 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்திய ஆஸ்திரேலியா!

இந்தியாவுக்கு சுற்றப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, டெஸ்ட் தொடரை 1-2 என்ற கணக்கில் தோல்வியுற்றது. இதனைத் தொடர்ந்து 3 ஆட்டங்களை கொண்ட ஒருநாள் தொடர் நடைபெற்று வருகிறது. இதில், மும்பையில் நடந்த முதல் ஒருநாள் போட்டியில், ஆஸ்திரேலியா அணியை இந்திய அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இரண்டாவது ஒருநாள் போட்டி
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 2 வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் அமைந்துள்ள ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி கிரிக்கெட் மைதானத்தில் நடந்தது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்துவீச்சை தேர்வு செய்து இந்தியாவை பேட் செய்ய அழைத்தது.
கேப்டன் ரோகித் சர்மா மற்றும் சுப்மன் கில் ஆகியோர் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கினர். இதில் கில் முதல் ஓவரிலேயே டக் அவுட் ஆகி அவுட்டானார். இதனையடுத்து ரோகித்துடன், கோலி ஜோடி சேர்ந்தார். ஆஸ்திரேலிய அணியின் அபார பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் இந்திய அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தவித்தது. இதில் கேப்டன் ரோகித் சர்மா 13 ரன்களிலும், சூர்யகுமார் யாதவ் ரன் எடுக்காமல் முதல் பந்திலேயே அவுட் ஆனார்.
அடுத்து களம் இறங்கிய ராகுல் 9 ரன், ஹர்திக் பாண்ட்யா 1 ரன், ஜடேஜா 16 ரன், குல்தீப் 4 ரன், ஷமி 0 ரன் எடுத்திருந்த நிலையில் அவுட் ஆகினர். நிதானமாக ஆடிய கோலி 31 ரன்னில் வீழ்ந்தார். அக்ஷர் படேல் 29 ரன்னுடன் அவுட்டாகாமல் இருந்தார். இறுதியில் இந்திய அணி 26 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 117 ரன்னுக்கு ஆல்-அவுட் ஆனது. ஆஸ்திரேலிய அணி தரப்பில் மிட்செல் ஸ்டார்க் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.
118 ரன்கள் இலக்கு
118 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் ஆஸ்திரேலியா ஆடியது தொடக்க வீரர்களாக களமிறங்கிய மிட்சேல் மார்ஷ் மற்றும் டிரேவிஸ் ஹெட் அதிரடியாக விளையாடி, இந்திய அணியின் பந்துவீச்சை துவம்சம் செய்தனர். இருவரும் இணைந்து பந்துகளை பவுண்டரி மற்றும் சிக்சருக்கு பறக்க விட்டனர். மிகச் சிறப்பாக விளையாடிய இருவரும் அரைசதம் அடித்தனர்.
இறுதியில் 11 ஓவர்கள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 121 ரன்கள் எடுத்தது, ஆஸ்திரேலிய அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றியைப் பெற்றது . மார்ஷ் 36 பந்துகளில் 66 ரன்களையும், ஹெட் 30 பந்துகளில் 51 ரன்களையும் எடுத்தனர்.
இந்த வெற்றியால் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 1-1 என இரு அணிகளும் சமநிலை பெற்றுள்ளது. தொடரின் வெற்றியாளரை தீர்மானிக்கும் 3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி வரும் 22 ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற இருக்கிறது.