இந்தியா
2026-2027 ஆம் ஆண்டு ஒன்றிய பட்ஜெட் – நிதி ஒதுக்கப்படவில்லை. ஓசூர்-திருப்பத்தூர் மற்றும் திண்டிவனம்-நகரி ரயில் வழித்தட திட்டங்கள் அம்போ…

நேற்றைய ஒன்றிய அரசின் பட்ஜெட்டில் தமிழ்நாட்டுக்கான ரயில்வழித்தட திட்டங்களுக்கு எதற்கும் நிதி ஒதுக்கப்படாமல் கைவிடப்பட்டுள்ளது.
ஓசூர்-திருப்பத்தூர் ரயில்வழித்தடம்
ஓசூர் முதல் கிருஷ்ணகிரி வரை பெருகியுள்ள பல்வேறு தொழிற்சாலைகளால் திருப்பத்தூர் கிருஷ்ணகிரி மற்றும் தருமபுரி மாவட்ட மக்களுக்கு பல்வேறு நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்புகளும் பல்வேறு விதமான வணிகங்களும் அதிகரித்துள்ளன.
இதனால் ஓசூரில் ஒரு விமான நிலையம் அமைக்க எழுப்பப்பட்ட கோரிக்கையும் ஒன்றிய அரசால் நிராகரிக்கப்பட்டது. இப்போது திருப்பத்தூர்-ஓசூர் புதிய ரயில்வழித்தடமும் கேள்விக் குறியாகிப் போனது. சேலம் தருமபுரி கிருஷ்ணகிரி மற்றும் திருப்பத்தூர் என நான்கு மாவட்டங்களின் மக்களின் கோரிக்கையை செயல்படுத்தும் வகையில் திருப்பத்தூர்-ஓசூர் இடையே புதிய ரயில் பாதை அமைப்பதற்கான புர்வாங்க பணிகள் தொடங்கியிருந்தன. சுமார் 101 கி.மீ. தொலைவிலான இப்பாதை அமைப்பதற்கான நில அளவீடு மற்றும் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணிகளும் நடைபெற்று வந்தன. இதற்கான திட்ட அறிக்கை சுமார் ரூ.4 ஆயிரம் கோடியில் தயாரிக்கப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரியில் கடந்த மாதம் ரயில்வே மற்றும் தமிழ்நாடு அரசு அதிகாரிகள் மற்றும் தொழிலதிபர்கள் கலந்து கொண்ட கூட்டத்தில் 2026-27 ஆம் ஆண்டு பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்த பட்ஜெட்டில் இந்த திட்டத்திற்கான நிதி ஒதுக்கப்படாததால் அணைத்து புர்வாங்க பணிகளும் உடனடியாக நிறுத்தப்பட்டன என 4 மாவட்ட மக்களும் வேதனை தெரிவிக்கின்றனர்.
திண்டிவனம்-நகரி ரயில் வழித்தடம்
முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின்போது ரூ.3631 கோடி மதிப்பீட்டில் நகரி-திண்டிவனம் இடையிலான 184.5 கி்மீ் தூர ரயில்பாதை திட்டம் தொடங்கப்பட்டது. இது நகரி பொதட்டூர்பேட்டை சோளிங்கர் வாலாஜா ரோடு ராணிப்பேட்டை ஆற்காடு ஆரணி செய்யாறு வந்தவாசி மரக்காணம் திண்டிவனம் வரையிலான திட்டமாகும்.
இதன்மூலம் ராணிப்பேட்டை சிப்காட் ஆரணி பட்டு உற்பத்தி செய்யாறு தொழிற்பேட்டை என இந்த பகுதிகள் வளர்ச்சி பெறும் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வந்தது. ஆனால் 2014 ம் ஆண்டு முதல் தொடர்ந்து 3வது முறையாக ஆட்சி செய்யும் பாஜக ஆட்சியில் கடந்த ஆண்டு மட்டுமே ரூ.347.7 கோடி நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வந்தன. முதல்கட்டமாக ரூ.8.56 கோடியில் கடந்த டிசம்பரில் திண்டிவனம்-ஆரணி இடையே 79 கி.மீ.தொலைவுக்கான பணியை முடிக்க திட்டமிடப்பட்டது. அதேபோல் வரும் மார்ச்சுக்குள் நகரி-பொதட்டூர்பேட்டை இடையே 13 கி.மீ. மற்றும் டிசம்பருக்குள் வாலாஜா-சோளிங்கர் இடையே 20 கி.மீ. பாதையை முடிக்கவும் திட்டமிடப்பட்டு பணிகள் நடைபெற்று வந்தன.
நேற்றைய பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப்படாததால் ஏற்கனவே உள்ள நிதியில் நடைபெறும் பணிகள் கிடப்பில் போடப்படும் என்ற அச்சம் திருவள்ளுர் ராணிப்பேட்டை திருவண்ணாமலை மற்றம் விழுப்புரம் மாவட்ட மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. இதற்காக ஆர்ஜிதம் செய்யப்பட வேண்டிய மொத்த நிலம் 688 எக்டேரில் 502 எக்டேர் மட்டுமே கையகப்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் முதல்கட்ட செலவு மதிப்பு ரூ.856 கோடியிலிருந்து 1000 கோடியாக உயர்ந்துள்ளது.
தமிழ்நாட்டில் எந்த புதிய ரயில் திட்டங்களும் அறிவிக்கப்படவில்லை என்றாலும் ஏற்கனவே உள்ள திட்டப் பணிகளை கிடப்பில் போடும் விதமாக நிதி ஒதுக்கீடு செய்யப்டாமலிருப்பது தமிழ்நாட்டின் மீதான ஒன்றிய அரசின் மாற்றாந்தாய் மனப்பான்மையைக் காட்டுவதாக பொதுமக்களும் வணிகர்களும் கவலை தெரிவித்துள்ளனர்.


