தமிழ்நாடு
20 தொகுதிகளில் இடைத்தேர்தல் சந்தேகம்தான்: தமிழிசை தகவல்!

தகுதிநீக்கம் செய்யப்பட்ட 18 தொகுதி எம்எல்ஏக்கள் உள்ளிட்ட காலியாக உள்ள 20 தொகுதிகளுக்கு தமிழகத்தில் இடைத்தேர்தல் நடத்தப்பட வேண்டிய கட்டாயத்தில் உள்ளது தேர்தல் ஆணையம். ஆனால் இந்த இடைத்தேர்தல் தற்போது நடைபெறுவதற்கான சூழல் இல்லை எனவும், சந்தேகம்தான் எனவும் தமிழக பாஜக தலைவர் தமிழிசை கூறியுள்ளார்.
தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் பாஜக சிறப்பு செயல்வீரர்கள் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசினார். இந்த நிகழ்ச்சிக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தமிழிசை, கஜா புயலால் டெல்டா மாவட்டங்கள் பாதிக்கப்பட்டு சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.
இத்த நேரத்தில் தமிழகத்தில் 20 இடங்களிலும் இடைத் தேர்தல் நடைபெறுவது என்பது சந்தேகம்தான். ஐந்து மாநிலங்களின் தேர்தலில் பாஜக குறிப்பிடத்தகுந்த வெற்றியை பெறும் என்றும் கூறினார். முன்னதாக பருவமழையை காரணம் காட்டி தமிழக தலைமை செயலாளர் எழுதிய கடிதத்தின் அடிப்படையில் இரண்டு தொகுதிகளுக்கான இடைத்தேர்தலை தேர்தல் ஆணையம் தள்ளிவைத்தது குறிப்பிடத்தக்கது.




















