தமிழ்நாடு
ஒரு லட்சத்து 70 ஆயிரம் பேர் தேவை: அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்

ஒரு லட்சத்து 70 ஆயிரம் பேர் வேலைக்கு தேவை என தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் தெரிவித்துள்ளார்.
தமிழக அரசு சமீபத்தில் இல்லம் தேடி கல்வி என்னும் திட்டத்தை தொடங்கியது என்பதும் ஒரு சில மாவட்டங்களில் மட்டும் தொடங்கப்பட்டுள்ள இந்த திட்டம் விரைவில் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் தொடங்கப்பட உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இல்லம் தேடி கல்வி திட்டத்தில் தன்னார்வலராக பணிபுரிய ஒரு லட்சத்து 70 ஆயிரம் பேர் தேவை என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் கூறியுள்ளார்.
இன்று புதுக்கோட்டையில் உள்ள பள்ளிகளில் ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் ஆசிரியர்கள் பணியிட கலந்தாய்வு இன்னும் ஒரு சில நாட்களில் அறிவிக்கப்படும் என்று கூறினார்.
மேலும் பள்ளி மாணவ மாணவியர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தும் பணி நடைபெற்று வருவதாக தெரிவித்தார்.
மேலும் இல்லம் தேடி கல்வி திட்டம் என்பது அரசின் கனவுத் திட்டம் என்றும் இந்த திட்டத்தை அனைத்து மாவட்டங்களுக்கும் கொண்டு செல்வோம் என்றும் இதற்காக ஒரு லட்சத்து 70 ஆயிரம் பேர் தன்னார்வலராக பணிபுரிய தேவை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.








