இந்தியா
பள்ளிக்கூட கழிப்பறையை சொந்த செலவில் கட்டிக் கொடுங்கள் – தாசில்தாருக்கு நீதிபதி சுவாரசிய உத்தரவு

சேலம் மாவட்டம் காடையாம்பட்டி தாலுக்காவைச் சேர்ந்தவர் ரோஜா. கணவாய்புதூர் கிராமத்தில் உள்ள 1.26 ஏக்கர் நிலத்துக்கு பட்டா வழங்கக் கோரி காடையாம்பட்டி தாசில்தாருக்கு 2020 டிசம்பர் 23ம் தேதி விண்ணப்பித்திருந்தார். அவருடைய விண்ணப்பத்தை தாசில்தார் அக்டோபர் 12ம் தேி 2021ல் நிராகரித்துவிட்டார்.
தாசில்தார் நிராகரித்ததை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் ரோஜா வழக்கு தொடர்ந்தார். உயர்நீதிமன்றமும் மனுவை விசாரித்து மனுதாரருக்கு உரிய வாய்ப்பு அளித்து 2 மாதங்களுக்குள் வருவாய்த்துறை தக்க முடிவு எடுக்க அறிவுறுத்தி 2024 டிசம்பர் 10ம் தேதி உத்தரவிட்டது.
இரண்டு மாதங்கள் கடந்த பின்னரும் நீதிமன்ற உத்தரவை தாசில்தார் செயல்படுத்தாததால் சேலம் கலெக்டர், மேட்டூர் ஆர்டிஓ, காடையாம்பட்டி தாசில்தார் ஆகியோருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார் ரோஜா.
மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி ஆஷா அவர் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது,
அரசு அதிகாரிகள் நீதிமன்ற உத்தரவுகளை அலட்சியமாக அணுகுகின்றனர் என்பதற்கு இந்த சம்பவம் ஒரு எடுத்துக் காட்டாக இருக்கிறது. மனுதாரரின் விண்ணப்பத்தை பரிசீலித்து முடிவு எடுக்குமாறு ஏற்கனவே இந்த நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆனால் உத்தரவுகளை வருவாய்த்துறை அதிகாரிகள் நிறைவேற்றவில்லை. எனவே இது நீதிமன்ற அவமதிப்பாகும். நீதிமன்றத்தின் மாண்பும் கண்ணியமும் குறைக்கப்படுவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது.
காடையாம்பட்டி பஞ்சாயத்து யூனியன் நடுநிலைப்பள்ளியில் பாழடைந்து கிடக்கும் பெண்கள் கழிவறையை இடித்து விட்டு சொந்த செலவில் புதிய கழிவறையை தாசில்தார் கட்டிக் கொடுக்க வேண்டும். அதில் ஒரு இந்திய டாய்லெட், 2 வெஸ்டர்ன் டாய்லெட் அமைக்க வேண்டும். மேலும் அந்த கழிவறைக்கு தனியாக நீர்த்தேக்கத்தொட்டி கட்டி தொடர்ச்சியாக தண்ணீர் விநியோகிக்கப் படுவதை உறுதி செய்ய வேண்டும். கழிவறையை அரசு பணத்தில் கட்டக்கூடாது.
மனுதாரரின் விண்ணப்பம் நிராகரித்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. மற்றொரு அதிகாரிக்கு மனுதாரரின் விண்ணப்பத்தினை மாவட்ட ஆட்சியர் அனுப்பி வைத்து 2024 ம் ஆண்டு உத்தரவுப்படி மனுதாரருக்கு வாய்ப்பு வழங்கி அவருடைய மனுவை பரிசீலித்து உரிய முடிவு எடுக்க வேண்டும். இந்த உத்தரவை நிறைவேற்றியது குறித்து வருவாய்த்துறையினர் ஜனவரி 2ம் தேதி அறிக்கை அளிக்க வேண்டும். இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.
