தமிழ்நாடு
ராஜேந்திர பாலாஜி தலைமறைவா? கைது செய்ய விரைந்த தனிப்படைகள்!

முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை கைது செய்ய இரண்டு தனிப்படைகள் திருச்சி சென்று இருப்பதாக கூறப்படும் நிலையில் அவர் தலைமறைவாகி இருப்பதாக செய்திகள் வெளியாகி இருப்பதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி வேலை வாங்கி தருவதாக மூன்று கோடி ரூபாய்க்கு மேல் மோசடி செய்ததாக எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கில் தன்னை கைது செய்ய வாய்ப்பு இருப்பதாகவும் அதனால் தனக்கு முன்ஜாமீன் வழங்க வேண்டும் என்றும் ராஜேந்திரபாலாஜி தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு காவல்துறையினர் தரப்பில் இருந்து கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதை அடுத்து ராஜேந்திர பாலாஜியின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
இதனை அடுத்து ராஜேந்திர பாலாஜி கைது செய்யப்பட அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்ட நிலையில் இரண்டு தனிப்படைகள் அவரை கைது செய்ய திருச்சி விரைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில் திடீரென முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தலைமறைவாகி விட்டதாகவும் அவரை தேடும் பணியில் தனிப்படை காவல்துறையினர் ஈடுபட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது. முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி கைது என்ற தகவல் எந்த நேரத்திலும் வெளிவரும் என்று கூறப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.














