இந்தியா
எல்.ஐ.சிக்கு புதிய மேனேஜிங் டைரக்டர்.. அதானியால் ஏற்பட்ட நஷ்டத்தை மீட்டு கொடுப்பாரா?

அதானி குழும நிறுவனங்களில் முதலீடு செய்ததால் எல்ஐசி நிறுவனத்திற்கு மிகப்பெரிய நஷ்டம் என்று கூறப்பட்டு வரும் நிலையில் தற்போது எல்ஐசிக்கு புதிய மேனேஜிங் டைரக்டர் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்தியாவின் மிகப்பெரிய காப்பீட்டு நிறுவனமான எல்ஐசி நிறுவனத்தின் புதிய நிர்வாக இயக்குனராக எம் ஜெகன்நாத் என்பவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார் என்றும் மார்ச் 13ஆம் தேதி அவர் பொறுப்பேற்றுள்ளார் என்றும் தகவல் வெளியாகி உள்ளன. மார்ச் 13ஆம் தேதி இது குறித்து வெளியான அறிவிப்பில் எம் ஜெகநாத் என்பவர் இந்திய எல்ஐசி நிர்வாக இயக்குனராக நியமிக்கப்பட்டார் என்றும் அவர் ஓய்வு பெறும் வரை அல்லது அடுத்த உத்தரவு வரும் வரை இந்த பதவியில் அவர் இருப்பார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 1988 ஆம் ஆண்டு எல்ஐசி நிறுவனத்தில் அதிகாரியாக தனது வாழ்க்கையை தொடங்கிய ஜெகன்நாத் எர்ணாகுளம், தார்வாட், பெங்களூர் உள்பட பல பிரிவுகளில் மூத்த கோட்டை மேலாளராக பணியாற்றியுள்ளார். 2009 மற்றும் 2013 ஆம் ஆண்டுகளில் இலங்கையில் கொழும்புவில் உள்ள எல்ஐசியின் முக்கிய அதிகாரியாக பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் தெலுங்கானா, ஆந்திர பிரதேசம், கர்நாடகா ஆகிய மூன்று மாநிலங்களை உள்ளடக்கிய ஹைதராபாத்திற்கு மத்திய எல்.ஐ.சியின் மண்டல மேலாளராகவும் இவர் பணியாற்றி உள்ளார். இந்த நிலையில் தற்போது எல்ஐசியின் நிர்வாக இயக்குனர் பதவிக்கு அவரது பெயர் பரிந்துரை செய்யப்பட்டதை அடுத்து இந்த பதவிக்கு பொறுப்பு ஏற்று உள்ளார்.
வணிகவியல் பட்டதாரியான அவர் மார்க்கெட்டிங், இன்சூரன்ஸ் ஆகிய துறைகளிலும் டிப்ளமா படிப்பு படித்து உள்ளார் என்பதும் மும்பையில் உள்ள இந்திய இன்சூரன்ஸ் இன்ஸ்டிடியூட்டின் உறுப்பினராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுவரை எல்ஐசி மேனேஜிங் டைரக்டராக இருந்த எம் ஆர் குமார் அவர்களின் பதவிக்காலம் நிறைவடைந்ததை அடுத்து ஜெகன்நாத் இந்த பதவிக்கு நியமனம் செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதானி குழும நிறுவனங்களில் எல்.ஐ.சி முதலீடு செய்துள்ளதை அடுத்து அந் நிறுவனத்திற்கு மிகப்பெரிய நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படும் நிலையில் அந்த நஷ்டத்தை ஈடு கட்டும் வகையில் புதிதாக மேனேஜிங் டைரக்டராக பொறுப்பேற்றிருக்கும் எம் ஜெகன்நாத் என்னென்ன நடவடிக்கை ஏற்பார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.